பெல்ஜியம் நாட்டின் வடக்கே உள்ள புக்கென்ஹவுட் (Buggenhout) பகுதியில், இன்று (மே 26, செவ்வாய்க்கிழமை) காலை பள்ளி மாணவர்களை ஏற்றிச் சென்ற சிறிய பேருந்து ஒன்றின் மீது அதிவேகத் தொடருந்து (Train) மோதியதில் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.
இன்று காலை சுமார் 8:08 மணியளவில் ஒரு இருப்புப்பாதைக் கடவையில் (Level crossing) இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இன்னும் ஒரு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள அடுத்த நிறுத்தத்தில் நிற்க வேண்டிய தொடருந்து, எதிர்பாராத விதமாக இந்த வாகனத்தின் மீது மிகக் கடுமையாக மோதியுள்ளது என பெல்ஜிய இருப்புப்பாதை நிர்வாகத்தின் (Infrabel) செய்தித் தொடர்பாளர் ஃப்ரெடெரிக் சாக்ரே (Frédéric Sacré) தெரிவித்துள்ளார்.
விபத்துக்குள்ளான அந்தப் பள்ளி வாகனத்தில் ஏழு மாணவர்கள், ஓட்டுநர் மற்றும் ஒரு உதவியாளர் என மொத்தம் ஒன்பது பேர் பயணித்துள்ளனர்.
மோதிய வேகத்தில் வாகனம் பலத்த சேதமடைந்துள்ளதுடன், இதில் பயணித்தவர்களில் பலர் உயிரிழந்துள்ளதாகக் காவல் துறையினர் உறுதிப்படுத்தியுள்ளனர். எனினும் பலியானவர்களின் துல்லியமான எண்ணிக்கை இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை.
காயமடைந்தவர்கள் அனைவரும் மீட்கப்பட்டு அப்பகுதியில் உள்ள பல்வேறு மருத்துவமனைகளுக்கு உடனடியாகக் கொண்டு செல்லப்பட்டுள்ளனர்.
விபத்தை ஏற்படுத்திய தொடருந்தில் சுமார் 100 பயணிகள் இருந்துள்ளனர். அவர்கள் அனைவரும் தீயணைப்பு வீரர்களின் உதவியுடன் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். தொடருந்தில் பயணித்த யாருக்கும் உடல் ரீதியான காயங்கள் எதுவும் ஏற்படவில்லை; இருப்பினும், பயணி ஒருவர் கடும் மன அதிர்ச்சிக்குள்ளாகி மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார்.
பெல்ஜியத்தின் உள்துறை அமைச்சர் பெர்னார்ட் குவின்டின் (Bernard Quintin) இந்தச் சம்பவத்தைக் “கொடூரமான விபத்து” எனக் குறிப்பிட்டுள்ளார். “உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கும் அவர்களது அன்புக்குரியவர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள்.
காயமடைந்தவர்கள் மனவலிமையுடன் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்” எனத் தனது எக்ஸ் (X) தளத்தில் அவர் பதிவிட்டுள்ளார். See less

