பிரான்சில் மே மாதத்தில் வெப்பநிலை 30 பாகை செல்சியஸைக் கடந்து பதிவாகி வரும் நிலையில், வெதுப்பகம், கட்டுமானத் துறை, உணவகங்கள் மற்றும் விநியோகத் துறைகளில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு வேலை செய்வது ஒரு பெரும் சவாலாக மாறியுள்ளது.
இந்த அசாதாரண சூழலை எதிர்கொள்ள நிறுவனங்களும் தொழிலாளர்களும் கையாளும் வழிமுறைகள் குறித்த ஒரு பார்வை:
வெந்து தணியும் வெதுப்பகத் தொழிலாளர்கள்
வெதுப்பகங்களுக்குள் மாவு பிசைவதை விட, பாண் களை அடுப்பில் வேகவைத்து எடுப்பதுதான் தொழிலாளர்களுக்குப் பெரும் சவாலாக மாறுகிறது.
பாரிஸில் உள்ள ‘Tout Autour du Pain வெதுப்பகத்தின் உரிமையாளர் பெஞ்சமின் டூர்கியே கூறும்போது, தொழிலாளர்களின் நலன் கருதி வேலை நேரத்தை அதிகாலையிலேயே தொடங்குவதாகக் குறிப்பிடுகிறார். இதன் மூலம் மதிய நேரத்து வேலைகள் குறைக்கப்படுகின்றன. மேலும், தயாரிக்கும் பொருட்களின் எண்ணிக்கையையும் சற்று குறைத்துள்ளனர்.
“அடுப்புகளிலிருந்து வரும் வெப்பம் கடைக்குள் ஏறுவதாலும், போதிய காற்றோட்டம் அல்லது குளிரூட்டி வசதி இல்லாததாலும் எங்களால் வேலை செய்ய முடிவதில்லை. இது கடுமையான தலைவலியையும் சோர்வையும் ஏற்படுத்துகிறது” என அந்த வெதுப்பகத்தின் விற்பனையாளர் சலிமா செம்மார் வேதனையுடன் தெரிவிக்கிறார்.
கட்டுமானத் துறையில் தீவிர முன்னெச்சரிக்கைகள் கற்காரை மற்றும் தார்ச் சாலைகளில் நேரடியாக வெயிலை எதிர்கொள்ளும் கட்டுமான மற்றும் தூய்மைப் பணியாளர்களுக்கு நிறுவனங்கள் சில அவசரகால வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன.
போர்டோ (Bordeaux) நகரச் சான்றுகள்: போர்டோ நகரில் வெப்பநிலை 30 பாகையை நெருங்கியுள்ள நிலையில், சாலைப் பணியாளர்களுக்கு சில பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.
தொழிலாளர்கள் அனைவருக்கும் தலா ஒரு லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் குடுவைகள் வழங்கப்பட்டுள்ளன.
தாகத்தைத் தணிக்கச் சாலைகளில் ஆங்காங்கே குடிநீர் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
வேலை நேரம் மாற்றியமைக்கப்பட்டு, அதிகாலை 6:30 மணிக்கே வேலை தொடங்குகிறது. மதியம் 2:15 மணிக்கு வேலை நிறைவடைகிறது.
இடையில் 20 முதல் 25 மணித்துளிகள் வரை ஓய்வு இடைவேளை வழங்கப்படுகிறது.
உணவக ஊழியர்களின் மாற்று ஏற்பாடுகள் உணவகங்களில் மேசைகளுக்கு இடையே ஓடி ஓடிப் பணியாற்றும் ஊழியர்களும் வெயிலைச் சமாளிக்கத் தங்களை மாற்றிக்கொண்டுள்ளனர்.
“வழக்கமான முழுக்கைச் சட்டைகளுக்குப் பதிலாக, வெயிலைத் தாங்கக்கூடிய எளிய பருத்தி அரைக்கைச் சட்டைகளை இப்போது அணிகிறோம். நல்வாய்ப்பாக மின்விசிறிகள் இருப்பதால் எப்படியோ சமாளித்து விடுகிறோம்” என உணவகப் பணிப்பெண் ஒருவர் கூறுகிறார்.
ஆய்வுகள் எச்சரிக்கும் அதிர்ச்சித் தகவல் சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்றின்படி, வெப்பநிலை 32 பாகை செல்சியஸைக் கடக்கும்போது, தொழிலாளர்களின் வேலைத்திறன் 40 விழுக்காடு வரை சரிகிறது என்று கண்டறியப்பட்டுள்ளது.
எனவே, இத்தகைய கடுமையான வெப்ப அலைகளின் போது தொழிலாளர்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கப் பணிபுரியும் இடங்களை மாற்றி அமைப்பது, குளிர்ந்த குடிநீர் வழங்குவது, தகுந்த பாதுகாப்பு உபகரணங்களை அளிப்பது மற்றும் வேலை நேரத்தை மாற்றுவது போன்றவை வேலை வழங்குநர்களின் சட்டப்பூர்வக் கடமையாக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

