துருக்கியில் அரசியல் உச்சக்கட்டம்

எதிர்க்கட்சித் தலைமை அலுவலகத்திற்குள் புகுந்து காவற்துறையினர் அதிரடி நடவடிக்கை!

துருக்கியின் பிரதான எதிர்க்கட்சியான குடியரசு மக்கள் கட்சியின் (CHP) தலைமை அலுவலகத்தில் கடந்த மூன்று நாட்களாக நீடித்து வந்த அரசியல் முட்டுக்கட்டை, காவற்துறையினரின் அதிரடித் தலையீட்டோடு முடிவுக்கு வந்துள்ளது.

அக்கட்சியின் தலைவர் பதவியிலிருந்து நீக்கப்பட்ட உஸ்குர் உசெல் (Ozgur Ozel) மற்றும் அவரது ஆதரவாளர்களை காவற்துறை அங்கிருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றியுள்ளது.

கடந்த பெப்ரவரி, மார்ச் மாதங்களில் துருக்கியில் ஏற்பட்ட அரசியல் நகர்வுகளின் தொடர்ச்சியாக, கடந்த மே 21 அன்று அங்காராவில் உள்ள மேல்முறையீட்டு நீதிமன்றம் ஒரு அதிரடித் தீர்ப்பை வழங்கியது.

அதில், 2023ஆம் ஆண்டு நடைபெற்ற உட்கட்சித் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகக் கூறி, உஸ்குர் உசெல் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட உட்கட்சித் தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் செல்லாததாக்கியது.

மேலும், அவருக்குப் பதிலாக கட்சியின் முன்னாள் தலைவர் கெமால் கிலிக்டாரோக்லுவை (Kemal Kilicdaroglu) தற்காலிகத் தலைவராக நியமிக்க உத்தரவிட்டது.

இந்தத் தீர்ப்பை ஒரு “நீதித்துறை சதி” என வர்ணித்த உஸ்குர் உசெல் மற்றும் அவரது ஆதரவாளர்கள், கட்சியின் தலைமை அலுவலகத்தை விட்டு வெளியேற மறுத்து வந்தனர். இந்த நிலையில், நேற்று அங்காரா ஆளுநரின் உத்தரவின் பேரில் அதிரடி காவற்துறையினர் கட்சியின் தலைமையகத்திற்குள் நுழைந்தனர்.

அப்போது அங்கு தற்காலிகமாக அமைக்கப்பட்டிருந்த தடைகளை உடைத்துக் கொண்டு, கண்ணீர்ப்புகைக் குண்டுகள் மற்றும் ரப்பர் தோட்டாக்களைப் பயன்படுத்தி காவற்துறையினர் உள்ளே இருந்தவர்களை வெளியேற்றினர்.

இந்த சம்பவத்தின் போது யாருக்கும் பெரிய அளவில் காயம் ஏற்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அலுவலகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னர், உஸ்குர் உசெல் தனது ஆதரவாளர்களுடன் அங்கிருந்து சுமார் 6 கிலோமீற்றர் தொலைவில் உள்ள நாடாளுமன்றத்தை நோக்கிப் பேரணியாகச் சென்றார்.

அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான மக்கள் மத்தியில் உரையாற்றிய அவர், “நாங்கள் இனி வீதிகளிலும் சதுக்கங்களிலும் நின்று அதிகாரத்தை நோக்கிப் பயணிப்போம்”

என ஆக்ரோஷமாக முழக்கமிட்டார். 2024ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் தற்போதைய அதிபர் தையிப் எர்டோகனின் கட்சிக்கு பலத்த பின்னடைவை ஏற்படுத்திய எதிர்க்கட்சித் தலைவர் உசெல், இவ்வாறு நீதிமன்றம் மூலம் நீக்கப்பட்டிருப்பது துருக்கியின் ஜனநாயகச் சூழலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Recommended For You

About the Author: admin