அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை (Enriched Uranium) அமெரிக்காவிடம் ஒப்படைத்து அழிக்க வேண்டும் அல்லது சர்வதேசப் பார்வையாளர்களின் முன்னிலையில் ஏதேனும்
ஒரு பொருத்தமான இடத்தில் வைத்து அது அழிக்கப்பட வேண்டும் என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்துத் தனது ‘டிரூத் சோசியல்’ பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், ஈரானின் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை “அணுசக்தி தூசி” (Nuclear Dust) எனக் குறிப்பிட்டுள்ளார். இந்த யுரேனியம் உடனடியாக அமெரிக்காவிற்கு கொண்டு வரப்பட்டு அழிக்கப்பட வேண்டும் அல்லது ஈரானுடன் இணைந்து சர்வதேச அணுசக்தி முகவாண்மை (IAEA) அல்லது அதற்கு இணையான அமைப்பின் நேரடி மேற்பார்வையில் அங்கீகரிக்கப்பட்ட ஓரிடத்தில் அழிக்கப்பட வேண்டும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கத்தாரில் இரு நாடுகளுக்கும் இடையே அமைதிப் பேச்சுவார்த்தைகள் தீவிரமாக நடந்து வரும் சூழலிலும், தெற்கு ஈரானில் அமெரிக்க இராணுவம் தற்காப்புத் தாக்குதல்களை நடத்தியுள்ள நிலையிலும் ஜனாதிபதி ட்ரம்பின் இந்த அதிரடி அறிக்கை வெளியாகியுள்ளது.
ஈரானிடம் தற்போது சுமார் 440 கிலோகிராம் அளவிலான 60 சதவீத செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த யுரேனிய இருப்பு இரு நாடுகளுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையில் ஒரு முக்கிய முட்டுக்கட்டையாக நீடித்து வருகிறது.
ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை வெளிநாடுகளுக்கு அனுப்பப் போவதில்லை என அதன் செய்தி நிறுவனங்கள் மூலம் மறுப்பு தெரிவித்து வரும் நிலையில், ட்ரம்ப் இந்த நிபந்தனையை மீண்டும் தளர்த்தாமல் திட்டவட்டமாக முன்வைத்துள்ளார்.
அத்துடன், ஈரானுடனான இறுதி உடன்படிக்கை எட்டப்பட்டால், சவூதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகள் இஸ்ரேலுடனான உறவை இயல்பாக்கும் ‘ஆபிரகாம் உடன்படிக்கையில்’ (Abraham Accords) கட்டாயம் இணைய வேண்டும் என்றும், ஒருவேளை ஒப்பந்தம் சாத்தியமாகாவிட்டால் மத்திய கிழக்கில் மீண்டும் போர் தீவிரமடையும் என்றும் ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.

