பாரிஸில் அதிநவீனப் பாதுகாப்புடைய வாகன நிறுத்தத்திலிருந்து 17 சொகுசு மகிழுந்துகள் திருடப்பட்டன !
பாரிஸின் 15-வது வட்டத்தில் (XVᵉ arrondissement) உள்ள அதிநவீனப் பாதுகாப்பு வசதிகள் கொண்ட தனியார் சொகுசு வாகன நிறுத்தத்தில் (Conciergerie de luxe) கடந்த சனிக்கிழமை (மே 16) நள்ளிரவில் ஒரு மாபெரும் கொள்ளைச் சம்பவம் அரங்கேறியுள்ளது. விலைமதிப்பற்ற 17 சொகுசு மகிழுந்துகள் கொள்ளையடிக்கப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
‘சுமேர் வால்ட்’ (Sumer Vault) என்ற இந்தத் தனியார் வாகன நிறுத்தம், கண்காணிப்புக் கருவிகள், பாதுகாப்பான நுழைவு வாயில்கள் மற்றும் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கும் நேரடிக் காவல் உலாப் பணிகள் என அதிநவீனப் பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டது. இருப்பினும், சுமார் 15 பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் இவற்றையெல்லாம் மீறி இந்தத் திருட்டை அரங்கேற்றியுள்ளது.
நள்ளிரவில் வாகன நிறுத்தத்திற்குள் நுழைந்த கொள்ளையர்கள், உள்ளே இருந்த வாடகை அலுவலகத்தை உடைத்து மகிழுந்துகளின் சாவிகளை எடுத்துள்ளனர். பின்னர் அங்கிருந்து வரிசையாகச் சொகுசு மகிழுந்துகளை ஓட்டிச் சென்றுள்ளனர்.
போர்ஷ் (Porsche), ஆஸ்டன் மார்ட்டின் (Aston Martin) மற்றும் பல நான்கு சக்கர இயக்கி வகைச் சொகுசு மகிழுந்துகள் எனப் பல வண்ணங்களிலான மகிழுந்துகள் திருடப்பட்டுள்ளன.
இந்த மகிழுந்துகள் ஒவ்வொன்றாக வெளியேற்றப்பட்டதை நேரில் பார்த்த பொதுமக்கள், அது வாகன நிறுத்தத்தின் ஊழியர்கள் செய்யும் வழக்கமான பணி என்றே நினைத்துள்ளனர். ஒரு மாபெரும் கொள்ளை தங்கள் கண்முன்னே நடப்பதை அவர்கள் சற்றும் உணரவில்லை. “நாங்கள் ஒரு நேரலைத் திருட்டை (casse en direct) பார்த்தோம் என்பதை ஒரு கணம் கூட ஊகிக்கவில்லை; அது வாகனப் பணிமனை ஊழியர்கள் என்றே நினைத்தோம்” என நேரில் பார்த்த சாட்சிகள் அதிர்ச்சியுடன் தெரிவித்தனர்.
அதிகாலை 3:30 மணியளவில் வாகன நிறுத்தப் பாதுகாப்புப் பிரிவிடமிருந்து தகவல் கிடைத்ததும் காவல்துறையினர் விரைந்து வந்தனர். பாரிஸின் தென்மேற்குப் பகுதியில் தப்பியோட முயன்ற 4 கொள்ளையர்களைக் காவல்துறையினர் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர்.
திருடப்பட்ட வாகனங்களில் ஒன்று மட்டும் வில்ஜுஃப் (Villejuif) பகுதியில் ஆளில்லாமல் மீட்கப்பட்டது. மற்ற மகிழுந்துகள் எங்குள்ளன என்பது இன்னும் கண்டறியப்படவில்லை.
“இந்த மகிழுந்துகள் பெரும்பாலும் கொள்கலன்கள் (conteneurs) அல்லது சரக்குந்துகள் மூலம் வெளிநாடுகளுக்குக் கடத்தப்படலாம்; அல்லது உதிரிபாகங்களுக்காகப் பிரிக்கப்படலாம்” எனக் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர் .
இந்த சம்பவத்தை சிறப்புப் புலனாய்வுப் பிரிவான BRB (Brigade de répression du banditisme) தீவிரமாக விசாரித்து வருகிறது. திருடப்பட்ட மகிழுந்துகளின் மொத்த மதிப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படாவிட்டாலும், இழப்பீடு பல மில்லியன் யூரோக்களைத் தாண்டும் மாபெரும் தொகையாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

