இல்-து-பிரான்ஸ் (Île-de-France) மாகாணத்தில் 500-க்கும் மேற்பட்ட வகுப்புகள் மூடல் – அதிகம் பாதிக்கப்படும் மாவட்டம் எது?
2026-2027 கல்வியாண்டில் பிரான்சின் பள்ளிகளில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள வகுப்புகள் மூடும் (Fermetures de classes) அதிர்ச்சியூட்டும் விவரங்களை ‘SNUipp-FSU’ ஆசிரியர் தொழிற்சங்கம் வெளியிட்டுள்ளது. இதில் இல்-து-பிரான்ஸ் (Île-de-France) மாகாணம் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
“கல்வித் தேவைகள் மிக அதிகமாக உள்ள மாவட்டங்களில், பொதுக் கல்விச் சேவையின் வீழ்ச்சியையே இந்த எண்கள் காட்டுகின்றன. இது காலப்போக்கில் பிராந்திய ஏற்றத்தாழ்வுகளை (Inégalités territoriales) மேலும் அதிகரிக்கும்” எனத் SNUipp-FSU’ ஆசிரியர் தொழிற்சங்கம் மே 18 திங்கட்கிழமை வெளியிட்ட அறிக்கையில் எச்சரித்துள்ளது. மாவட்ட வாரியான பாதிப்புகளின் முழு விவரம் :
Seine-Saint-Denis: கடுமையான பாதிப்பு
மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்து வந்தாலும், இந்த மாவட்டத்தில் பள்ளிகளில் கடுமையான வெட்டுக்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஒட்டுமொத்த பிரான்சில் (வடக்கு மற்றும் ரோன் மாவட்டங்களுக்குப் பிறகு) அதிகம் பாதிக்கப்படும் மூன்றாவது மாவட்டம் இதுவாகும்.
வகுப்புகள்: 276 வகுப்புகள் மூடப்படவுள்ளன; வெறும் 125 புதிய வகுப்புகள் மட்டுமே திறக்கப்படும் (மொத்த இழப்பு: 151 வகுப்புகள்).
ஆசிரியர்கள்: 67 ஆசிரியர் பணியிடங்கள் (Postes de professeurs) முற்றிலுமாக ரத்து செய்யப்படுகின்றன.
போராட்டம்: கல்விக்கு முன்னுரிமை அளிக்க வேண்டிய பகுதிகளில் (Zones d’éducation prioritaire) இந்த நடவடிக்கை பேரிடியாக அமைந்துள்ளது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மே 21 அன்று வேலைநிறுத்தம் மற்றும் போராட்டத்திற்குத் தொழிற்சங்கம் அழைப்பு விடுத்துள்ளது.
பாரிஸ் (Paris): மூடலில் இரண்டாம் இடம்
தலைநகர் பாரிஸும் இந்த நடவடிக்கையிலிருந்து தப்பவில்லை. இல்-து-பிரான்ஸ் மாகாணத்தில் அதிக வகுப்புகளை இழப்பதில் பாரிஸ் இரண்டாவது இடத்தில் உள்ளது.
வகுப்புகள்: 161 வகுப்புகள் மூடப்படவுள்ளன; 19 வகுப்புகள் மட்டுமே புதிதாகத் திறக்கப்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆசிரியர்கள்: 83 ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படவுள்ளன.
Val-de-Marne: 91 வகுப்புகள் இழப்பு
இந்த மாவட்டத்திலும் வரும் கல்வியாண்டு மிகவும் மந்தமானதாகவே தொடங்கவுள்ளது.
வகுப்புகள்: 159 வகுப்புகள் மூடப்பட்டு, 68 வகுப்புகள் மட்டுமே திறக்கப்படும். இதன் மூலம் ஒட்டுமொத்தமாக 91 வகுப்புகளை இந்த மாவட்டம் இழக்கிறது.
ஆசிரியர்கள்: 41 ஆசிரியர் பணியிடங்கள் ரத்து செய்யப்படுகின்றன.
போராட்டம்: பள்ளிகள் எதிர்கொள்ளும் சமூகச் சிக்கல்களை அரசு கருத்தில் கொள்ளவில்லை எனக் குற்றம் சாட்டும் தொழிற்சங்கம், மே 27 அன்று பாரிஸில் நடைபெறும் மாபெரும் போராட்டத்தில் இணையுமாறு ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது.
Hauts-de-Seine: இங்கும் தப்பவில்லை
இல்-து-பிரான்ஸ் மாகாணத்தின் இரண்டாவது பணக்கார மாவட்டமான இங்கும் வகுப்புகளின் எண்ணிக்கை கடுமையாகக் குறைக்கப்படுகிறது.
வகுப்புகள்: 174 வகுப்புகள் மூடப்படவுள்ளன; 84 புதிய வகுப்புகள் மட்டுமே திறக்கப்படும்.
ஆசிரியர்கள்: 48 ஆசிரியர் பணியிடங்கள் நீக்கப்படுகின்றன.
பின்னணி: இந்த மாவட்டத்தில் மாணவர்களின் எண்ணிக்கை சுமார் 2,000 அளவிற்குக் குறையும் என மதிப்பிடப்பட்டாலும், இந்த அளவிலான பணியிட நீக்கங்கள் தாங்கிக்கொள்ள முடியாதவை எனத் தொழிற்சங்கம் கூறுகிறது.
“மாணவர் எண்ணிக்கை குறைவதை, கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான ஒரு வரலாற்று வாய்ப்பாக அரசு பயன்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் அதைச் செய்யத் தவறிவிட்டது” என உள்ளூர் சங்கப் பிரிவு தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

