பள்ளிகளில் நிதியியல் கல்வி: 2026 முதல் மாணவர்களுக்கு ‘கல்வி கடவுச்சீட்டு’ திட்டம் கட்டாயம்!

பள்ளிகளில் நிதியியல் கல்வி: 2026 முதல் மாணவர்களுக்கு ‘கல்வி கடவுச்சீட்டு’ திட்டம் கட்டாயம்!

பிரான்ஸில் வருகிற 2026 செப்டம்பர் கல்வியாண்டு முதல், நடுநிலைப் பள்ளிகளில் (Collège) 4e வகுப்பு (சுமார் 13 – 14 வயது) பயிலும் அனைத்து மாணவர்களுக்கும், நிதி மேலாண்மை குறித்த முறையான கல்வி வழங்கப்பட உள்ளது. பிரான்ஸ் மத்திய வங்கியால் (Banque de France) கடந்த 10 ஆண்டுகளாக முன்னெடுக்கப்பட்டு வரும் ‘கல்வி கடவுச்சீட்டு’ (Passeport Educfi) என்ற தேசியத் திட்டத்தின் கீழ் இது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

பள்ளிகளில் நிதியியல் கல்வி என்றால் என்ன?

ஒரு தனிநபர் தனது சொந்த நிதியைச் சரியாகப் புரிந்துகொண்டு நிர்வகிக்கத் தேவையான அறிவையும் திறன்களையும் வளர்ப்பதே இக்கல்வியின் நோக்கமாகும்.

வங்கிக் கணக்கு அறிக்கையைப் படிக்கத் தெரிந்துகொள்வது,

ஒரு பொருளின் ‘தேவைக்கும்’ (.Besoi- Need) ‘விருப்பத்திற்கும்’ (Envie- Want) உள்ள வேறுபாட்டை அறிவது,

கடன் வாங்கும் முறைகள் மற்றும் சேமிப்பு என்றால் என்ன என்பதைப் புரிந்துகொள்வது போன்ற அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான நடைமுறை விஷயங்களை இது உள்ளடக்கியது.

உலகெங்கிலும் சுமார் 60 நாடுகளில் பின்பற்றப்படும் இத்திட்டத்தைப் பிரான்ஸில் 2016-ஆம் ஆண்டு முதல் பிரான்ஸ் மத்திய வங்கி வழிநடத்தி வருகிறது.

இளைஞர்களிடம் நிதி விழிப்புணர்வை ஏற்படுத்த உருவாக்கப்பட்ட முக்கியக் கல்வி கருவி இதுவாகும். வரவு செலவுத் திட்ட மேலாண்மை, வங்கிச் சேவைகள், சேமிப்பு, கடன், மற்றும் நிதி மோசடிகளிலிருந்து தற்காத்துக் கொள்வது குறித்து இது கற்பிக்கிறது.

இது பள்ளிகளில் ஒரு தனிப்பாடமாக இல்லாமல், அன்றாடப் பள்ளி வாழ்க்கையோடு இணைத்துக் கற்பிக்கப்படும்.

எந்தவொரு ஆசிரியரும் பள்ளி நிர்வாகத்தின் துணையோடு இதனை மாணவர்களுக்குக் கற்பிக்கலாம். இதற்கான பாடக்குறிப்புகள் இணையத்தில் வழங்கப்பட்டுள்ளன.

இக்கல்வியின் முடிவில் மாணவர்களுக்குத் தேர்வுகள் நடத்தப்படும். பள்ளிகள் தாங்கள் விரும்பும் நேரத்தில் (குறிப்பாக மார்ச் மாதம் நடைபெறும் ‘நிதியியல் கல்வி வாரத்தில்’) இந்தத் தேர்வுகளை நடத்திக் கொள்ளலாம்.

13 வயதிலேயே இக்கல்வியை ஏன் வழங்க வேண்டும்?

மாணவர்களின் வாழ்வில் இது ஒரு மிக முக்கியமான திருப்புமுனைப் பருவமாகும். 13 அல்லது 14 வயதில், சிறுவர்கள் தங்கள் கைகளில் கிடைக்கும் சிறுதொகையையோ அல்லது இணையவழி வாங்குதல்களையோ தாங்களே சுயமாக நிர்வகிக்கத் தொடங்குகின்றனர். இந்நிலையில் பணத்தின் அருமையை அவர்களுக்கு உணர்த்துவது அவசியம்.

மேலும், கடன் சுமை, சமூக வலைத்தளங்களில் உள்ள போலிப் பிரபலங்களின் தவறான வழிகாட்டுதல்கள் மற்றும் முதலீட்டு மோசடிகள் போன்றவற்றில் சிக்காமல் இளம் வயதிலேயே அவர்களை விழிப்புடன் இருக்கச் செய்வதே இதன் முக்கிய நோக்கமாகும்.

திட்டத்தின் படிப்படியான விரிவாக்கம்:

2019-ஆம் ஆண்டு முதல் சில பள்ளிகளில் மட்டும் சோதனை முறையில் இருந்த இத்திட்டம், வருகிற 2026 முதல் அனைத்து 4e வகுப்பு மாணவர்களுக்கும் கட்டாயமாக்கப்படுவதன் மூலம் ஒரு புதிய மைல்கல்லை எட்டியுள்ளது.

2027 முதல்: மேல்நிலைப் பள்ளிகளிலும் (Lycées), தொழில்முறைக் கல்வி நிலையங்களிலும் (Voie professionnelle) இத்திட்டம் சோதனை முறையில் விரிவுபடுத்தப்பட உள்ளது.

Recommended For You

About the Author: admin