பிரான்ஸில் 2026 கோடைகாலத் தள்ளுபடி விற்பனை: தேதிகள் மற்றும் முக்கிய விதிமுறைகள்!
பிரான்ஸ் அரசின் அதிகாரப்பூர்வ அறிவிப்பின்படி, 2026-ஆம் ஆண்டிற்கான கோடைகாலத் தள்ளுபடி விற்பனை (Soldes d’été) ஜூன் 24 புதன்கிழமை தொடங்கி ஜூலை 21 செவ்வாய்க்கிழமை இரவு வரை நடைபெற உள்ளது. இது குறித்த முழுமையான நடைமுறை விவரங்கள் :
பொதுவாக, கோடைகாலத் தள்ளுபடி விற்பனை ஜூன் மாதத்தின் கடைசிப் புதன்கிழமை காலை 8 மணிக்குத் தொடங்கும். ஒருவேளை அந்தக் கடைசிப் புதன்கிழமை 28-ஆம் திகதிக்குப் பிறகு வந்தால், அதற்கு முந்தைய வாரப் புதன்கிழமைக்குத் தேதி மாற்றப்படும்.
சிறப்புத் திகதிகள் (கடல்கடந்த பிராந்தியங்கள்):
ரீயூனியன் தீவு (La Réunion): இங்குச் சற்று வித்தியாசமாகக் குளிர்காலத் தள்ளுபடிக்கு முன்பே கோடைகாலத் தள்ளுபடி வந்துவிடும். அங்கு 2026-ஆம் ஆண்டின் குளிர்காலத் தள்ளுபடி செப்டம்பர் 5 சனிக்கிழமை முதல் அக்டோபர் 2 வெள்ளிக்கிழமை வரை நடைபெறும்.
செயின்ட்-பார்த்தலெமி (Saint-Barthélemy) மற்றும் செயின்ட்-மார்ட்டின் (Saint-Martin): பிரதான நிலப்பரப்பில் கோடைகாலத் தள்ளுபடி தொடங்குவதற்குச் சற்று முன்பாக, இங்கு மே 2 முதல் மே 29 வரை குளிர்காலத் தள்ளுபடி நடைபெறவுள்ளது.
இணையவழி வர்த்தகம் (E-commerce):
நிறுவனத்தின் தலைமையகம் எங்கு அமைந்திருந்தாலும், இணையவழி விற்பனைக்கும் நாடு முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள அதே பொதுவான தேதிகளே கட்டாயம் பொருந்தும்.
எந்தெந்தப் பொருட்களுக்குத் தள்ளுபடி உண்டு?
தள்ளுபடியில் விற்கப்படும் பொருட்கள், தள்ளுபடி தொடங்குவதற்கு குறைந்தது ஒரு மாதத்திற்கு முன்பாவது கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்க வேண்டும். தள்ளுபடிக்காகவே புதிய பொருட்களைக் கொள்முதல் செய்து விற்கக் கூடாது.
கடைகளில், தள்ளுபடிப் பொருட்களையும் சாதாரணப் பொருட்களையும் வாடிக்கையாளர்கள் எளிதில் வேறுபடுத்திப் பார்க்கும் வகையில் தனித்தனியாகப் பிரித்து, தெளிவான விலைச் சீட்டுகளுடன் வைத்திருக்க வேண்டும்.
விலை நிர்ணய விதிகள்:
உண்மையான விலையிலிருந்து எவ்வளவு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது என்பதை விற்பனையாளர் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். அதிகத் தள்ளுபடி வழங்குவது போல் வாடிக்கையாளர்களை ஏமாற்ற, முன்கூட்டியே விலையை உயர்த்தி வைப்பது சட்டப்படி தடைசெய்யப்பட்டுள்ளது.
கடையின் முகப்பில் அறிவிக்கப்பட்ட தள்ளுபடியை உள்ளே வழங்க மறுப்பது ‘ஏமாற்று விளம்பரமாகக்’ கருதப்படும்.
விளம்பரங்களுக்கான கட்டுப்பாடுகள்:
தள்ளுபடி விற்பனை குறித்த எந்தவொரு விளம்பரத்திலும், விற்பனை தொடங்கும் திகதி மற்றும் எந்தெந்தப் பொருட்களுக்குத் தள்ளுபடி (அனைத்துப் பொருட்களுக்கும் தள்ளுபடி இல்லையெனில்) என்பதைக் கட்டாயம் குறிப்பிட வேண்டும். இதனை மீறினால் 1,500 யூரோக்கள் அபராதம் விதிக்கப்படும்.
(குறிப்பு: ஒவ்வொரு பருவத்திற்கான தள்ளுபடி விற்பனைக் காலமும் சரியாக 4 வாரங்கள் நீடிக்கும்படி வர்த்தகச் சட்டத்தின் கீழ் திட்டமிடப்பட்டுள்ளது).

