‘அடிமைத்தளை ஒழிப்பு நினைவு நாளை’ இரத்து செய்த தீவிர வலதுசாரி நகரசபை

‘அடிமைத்தளை ஒழிப்பு நினைவு நாளை’ இரத்து செய்த தீவிர வலதுசாரி நகரசபை – ‘செலவுக் குறைப்பு’ எனக் காரணம்!

பிரான்சின் வியர்சோன் நகரில் கடந்த மார்ச் மாதம் புதிதாகப் பொறுப்பேற்ற தீவிர வலதுசாரி நகரசபை, மே 10 அன்று (ஞாயிற்றுக்கிழமை) நாடு முழுவதும் கடைப்பிடிக்கப்படும் ‘அடிமைத்தளை ஒழிப்பு நினைவு நாள்’ நிகழ்வை அதிகாரப்பூர்வமாக இரத்து செய்துள்ளது. நிதி நெருக்கடி மற்றும் பொதுமக்களின் ஆர்வமின்மையே இதற்குக் காரணம் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.

 

கடந்த பத்தாண்டுகளில் முதல்முறையாக இந்நகரில் இந்த நினைவு நாள் புறக்கணிக்கப்பட்டுள்ளது. கடந்த 2006-ஆம் ஆண்டு அப்போதைய அதிபர் ஜாக் சிராக் அவர்களின் ஆணையின்படி, அனைத்து மாகாணங்களிலும் இந்த நினைவு நாள் நிகழ்வு அதிகாரப்பூர்வமாக நடத்தப்படுவது வழக்கம். ஆனால், “இது கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய 12 தேசிய நினைவு நாள்களின் பட்டியலில் இடம்பெறவில்லை” என நகரசபையின் துணை முதல்வர் ஈவ் ஹுஸ்டே வாதிட்டுள்ளார்.

 

நகரசபையின் இந்தச் சர்ச்சைக்குரிய முடிவை நியாயப்படுத்திப் பேசிய துணைமுதல்வர் , பின்வரும் காரணங்களை முன்வைத்தார்:

 

“இந்த நிகழ்வில் மக்களில் யாரும் கலந்துகொள்வதில்லை. இது கடந்தகால வரலாற்று நிகழ்வு, இதற்கும் நிகழ்காலத்திற்கும் எவ்விதத் தொடர்பும் இல்லை என்பதே மக்களின் ஆர்வமின்மைக்குக் காரணம்.”

 

சுமார் 25,000 பேர் வசிக்கும் இந்த நகரின் தற்போதைய கடன் 3 கோடியே 20 இலட்சம் யூரோக்களாக உள்ளது; மேலும், 25 இலட்சம் யூரோக்கள் மதிப்பிலான கட்டணங்கள் நிலுவையில் உள்ளன.

 

இந்த நிகழ்வின் போது மலர்வளையம் வைப்பதற்கு ஆகும் செலவான 1,500 யூரோக்களைக் குறைத்து, நகரின் செலவுகளைக் கட்டுப்படுத்தவே இந்த முடிவு எடுக்கப்பட்டது என அவர் விளக்கமளித்தார்.

 

நகரசபையின் இந்த முடிவைக் கடுமையாக எதிர்த்த அந்நகரின் முன்னாள் நகரமுதல்வரும் , தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நிக்கோலா சான்ஸ் , தனது சொந்த ஏற்பாட்டில் மலர்வளையம் வைத்து, கவிதைகள் வாசித்து மாற்று முறையில் இந்த நினைவு நாளைக் கடைப்பிடித்தார்.

 

“இது கவனக்குறைவோ அல்லது செலவைக் குறைக்கும் நடவடிக்கையோ அல்ல; மாறாக, தீவிர வலதுசாரி வாக்காளர்களில் உள்ள இனவாதச் சிந்தனை கொண்டவர்களைத் திருப்திப்படுத்தும் ஒரு மோசமான அரசியல் செயல்,” என அவர் தனது சமூக வலைத்தளத்தில் கடுமையாக விமர்சித்துள்ளார். எனினும், அவர் நடத்திய இந்த நிகழ்வுக்கு நகரசபை எவ்விதத் தடையும் விதிக்கவில்லை .

 

இரண்டாம் உலகப்போரின் முடிவிலிருந்து இடதுசாரிகளின் கோட்டையாகவும், 2008 முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் வசமும் இருந்த இந்த நகரம், கடந்த மார்ச் மாத இறுதியில் நடந்த உள்ளாட்சித் தேர்தலில் முதன்முறையாகத் தீவிர வலதுசாரிகள் வசம் வீழ்ந்தது. ‘தேசியப் பேரணி’ மற்றும் ‘மறுகட்டமைப்பு’ ஆகிய அமைப்புகளின் ஆதரவுடன் போட்டியிட்ட 50 வயதான காவல் அதிகாரி யானிக் லு ரூக்ஸ் 47.87 சதவீத வாக்குகளைப் பெற்று முதன்முறையாக நகரசபையைக் கைப்பற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: admin