லூவர் அருங்காட்சியகம் மற்றும் யூதர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம்: பாரிஸ் நகரில் இளைஞர் கைது!

லூவர் அருங்காட்சியகம் மற்றும் யூதர்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டம்: பாரிஸ் நகரில் இளைஞர் கைது!

பாரிஸ் நகரில் உள்ள புகழ்பெற்ற ‘லூவர்’ (Louvre) அருங்காட்சியகம் மற்றும் யூத மக்கள் மீது பயங்கரவாதத் தாக்குதல் நடத்தத் திட்டமிட்டிருந்த இளைஞர் ஒருவரைக் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

 

பிரான்சின் La Garenne-Colombes பகுதியில் வசித்து வந்த 27 வயதான துனிசியா நாட்டைச் சேர்ந்த இளைஞர் ஒருவரே இந்தக் குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். சட்டவிரோதமாகப் பிரான்சில் தங்கியிருந்த அவர் மீது ‘மக்களுக்கு எதிராகக் குற்றங்களைப் புரியத் திட்டமிட்ட பயங்கரவாதச் சதி’ உள்ளிட்ட கடுமையான பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டு, இன்று திங்கள்கிழமை (மே 11) நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

 

கடந்த ஏப்ரல் மாத இறுதியில் பாரிஸ் நகரின் மையப்பகுதியில் காவல்துறையினர் வழக்கமான வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த இளைஞர் போலி ஓட்டுநர் உரிமத்துடன் சிக்கினார். போலியான ஆவணங்களை வைத்திருந்த குற்றத்திற்காக அவர் கைது செய்யப்பட்டு, அகதிகள் தடுப்புக் காவல் மையத்தில் அடைக்கப்பட்டார்.

 

விசாரணையின் ஒரு பகுதியாக அவருடைய கைப்பேசியைக் காவல்துறையினர் தீவிரமாக ஆய்வு செய்தபோதே பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளிவந்தன. அவர் பாரிசின் புகழ்பெற்ற ‘லூவர்’ அருங்காட்சியகத்தின் மீதும், பாரிசின் 16-ஆவது வட்டாரத்தில் வசிக்கும் யூத சமூகத்தினர் மீதும் கொடூரமான தாக்குதல்களை நடத்தத் திட்டமிட்டிருந்தது அதன் மூலம் அம்பலமானது.

 

உள்ளூரில் தாக்குதல் திட்டங்களைத் தீட்டியது மட்டுமின்றி, சிரியா அல்லது மொசாம்பிக் நாடுகளில் தீவிரமாகச் செயல்பட்டு வரும் ‘இஸ்லாமிய அரசு’ (ஐ.எஸ்) பயங்கரவாத அமைப்பில் அவர் இணைந்து செயல்பட்டதும் கண்டுபிடிக்கப்பட்டதாக தேசியப் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

 

காவல்துறை விசாரணையின் போது, தன் மீதான அனைத்து வன்முறைத் திட்டக் குற்றச்சாட்டுகளையும் அந்த இளைஞர் திட்டவட்டமாக மறுத்துள்ளார். இருப்பினும், கைப்பேசியில் வலுவான ஆதாரங்கள் சிக்கியுள்ளதால், அவர் மீது முழுமையான நீதித்துறை விசாரணையைத் தொடங்கவும், விசாரணை முடியும் வரை அவரைத் தொடர்ந்து சிறையில் அடைத்து வைக்கவும் பயங்கரவாதத் தடுப்புப் பிரிவு வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது

Recommended For You

About the Author: admin