இன்று உலக ஊடக சுதந்திர தினம்:
அதிகாரத்தின் மாயத்திரையைக் கிழிக்கும் ‘மக்களுக்கான ஊடகவியல்’
(பாரிஸ் 03.05.2026 sci )
மே 3 இன்று உலக ஊடக சுதந்திர தினம் கொண்டாடப்படும் நிலையில், சமகால ஊடகங்களின் உண்மையான முகத்தையும், அவை எவ்வாறு அதிகாரத்தின் கருவிகளாகச் செயல்படுகின்றன என்பதையும் விவாதிப்பது அவசியமாகிறது. இன்றைய வணிக ஊடகச் சந்தை என்பது, ‘இலாபம்’ என்ற ஒற்றை மந்திரத்தால் மட்டுமே இயக்கப்படும் ஒரு இயந்திரமாக மாறியிருக்கிறது. இத்தகைய சூழலில், ஜனநாயகத்தின் மனசாட்சியை உயிர்ப்புடன் வைத்திருக்க ‘மக்களுக்கான ஊடகவியல்’ பெரும் பங்காற்ற வேண்டியுள்ளது.
கண்ணாடியா அல்லது சிற்பியா?
பொதுவாக ஊடகங்களை உண்மையைப் பிரதிபலிக்கும் நேர்மையான கண்ணாடிகள் என்று நாம் கருதுகிறோம். ஆனால் பல நேரங்களில், அவை அதிகாரத்தின் மாளிகைகளையும் வணிகத்தின் பிரம்மாண்டங்களையும் மட்டுமே படம்பிடித்துக் காட்டும் மாயக் கண்ணாடிகளாகவே உள்ளன. பிரெஞ்சு சிந்தனையாளர் மிஷேல் ஃபூக்கோவின் பார்வையில், ஊடகம் என்பது நடுநிலையான செய்தியாளர் அல்ல; மாறாக அது சமூகத்தின் உண்மைகளை எதுவென்று தீர்மானிக்கும் அதிகார மையமாகவும், யதார்த்தத்தையே செதுக்கும் சிற்பியாகவும் செயல்படுகிறது.
கி தெபோர் தனது ‘காட்சிச் சமூகக்’ கோட்பாட்டின் மூலம், நிஜமான அனுபவங்களை விட, அந்த அனுபவங்களின் பிம்பங்களுக்கு அதிக மதிப்பு உருவாகிவிட்டதாக எச்சரிக்கிறார். தத்துவஞானி ஜான் போத்ரியார் நாம் வாழும் இந்த உலகை ‘அதிமெய்ம்மை’ என்று அழைக்கிறார்; அதாவது, பிம்பத்திற்கு நிஜத்துடன் எந்தத் தொடர்பும் இல்லை என்றும், அதுவே ஒரு புது நிஜமாக மாறி உண்மையான நிலப்பரப்பை மூடி மறைத்துவிட்டது என்றும் குறிப்பிடுகிறார்.
சிந்தனையைச் சிறைப்பிடிக்கும் அதிகார வலை
அரசுகள் இன்று மக்களைக் கட்டுப்படுத்த வன்முறையை மட்டுமே நம்பியிருப்பதில்லை. லூயி அல்தூசரின் கூற்றுப்படி, ஊடகங்கள் ‘அரச கருத்தியல் கருவிகளாக’ச் செயல்பட்டு, வன்முறையின்றி மக்களின் சிந்தனைக்குள் புகுந்து அவர்களை ஆள்கின்றன. ஒரு குறிப்பிட்ட கருத்தியலை விதைப்பதன் மூலம் மக்களின் சம்மதத்தைப் பெறும் வேலையை ஊடகங்கள் நுட்பமாகச் செய்கின்றன.
அதேபோல, அறிஞர் நோம் சாம்ஸ்கி சுட்டிக்காட்டும் வடிகட்டிகளான பெருநிறுவன லாப நோக்கம் மற்றும் விளம்பரதாரர்களின் அதிகாரம் ஆகியவற்றைத் தாண்டி வரும் செய்திகள், தூய்மையான தகவல்களாக இல்லாமல் அதிகார வர்க்கத்திற்குச் சாதகமான பிரச்சாரமாகவே உருமாறுகின்றன. மேலும், ‘நாம்’ மற்றும் ‘அவர்கள்’ என்ற ஆபத்தான பிரிவினையை உருவாக்கி, மக்களைத் துண்டாடும் அரசியலையும் ஆதிக்க ஊடகங்கள் செய்கின்றன.
மக்களுக்கான ஊடகவியலின் கடமை
இந்த இருண்ட பகுதிகளுக்குள் உண்மையின் கைவிளக்கைக் கொண்டு சென்று வெளிச்சம் பாய்ச்சும் பொறுப்பு ‘மக்களுக்கான ஊடகவியலுக்கு’ இருக்கிறது. ஆதிக்க ஊடகங்கள் புறவயத்தன்மை என்ற பெயரில் ‘போலிச் சமநிலையை’ கடைப்பிடிக்கும்போது, மக்களுக்கான ஊடகம் அதை நிராகரிக்கிறது. “நாங்கள் எந்தச் சார்பும் இல்லாதவர்கள்” என்று பொய் சொல்வதைவிட, ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கம் நிற்பதாகத் தனது அறம் சார்ந்த சார்புநிலையை வெளிப்படையாக அறிவிப்பதே உண்மையான நேர்மையாகும். மேலும், மக்களுக்கான ஊடகம் என்பது சில பத்திரிகையாளர்கள் ,ஊடகவிலாளர்கள் மட்டும் மக்களுக்காகப் பேசுவதல்ல; மக்களே தங்களுக்காகப் பேசிக்கொள்ளும் ‘குடிமக்கள் ஊடகவியலாக’ அது பரிணமிக்க வேண்டும். அதிகார வர்க்கம் கட்டமைக்கும் சட்டகங்களை உடைத்தெறிந்து, இருட்டடிப்புச் செய்யப்படும் விளிம்புநிலை மக்களின் பிரச்சினைகளை விவாதத்தின் மையத்திற்கு கொண்டு வர வேண்டும்.
பொய்களும் புனைவுகளும் புயலெனச் சுழன்றடிக்கும் இன்றைய டிஜிட்டல் யுகத்தில், ஊடக சுதந்திரம் என்பது வெறுமனே கொண்டாடுவதற்கான சொல் அல்ல. அதிகாரத்தின் இரைச்சல்களுக்கு நடுவே, திட்டமிட்டு மௌனமாக்கப்பட்ட மக்களின் முனகல்களைக் கேட்பதும் , ஊடகங்களின் செயலற்ற நுகர்வோராக இல்லாமல் விழிப்புணர்வுள்ள விமர்சனப் பார்வையாளர்களாக நாம் மாறுவதுமே உண்மையான ஊடக சுதந்திரத்தின் அடித்தளமாகும்;

