பிரித்தானியாவின் பாக்லாந்து தீவுகளுக்கான உரிமையை அமெரிக்கா மீளாய்வு செய்கிறதா?

பிரித்தானியாவின் பாக்லாந்து தீவுகளுக்கான உரிமையை அமெரிக்கா மீளாய்வு செய்கிறதா? –

ஈரான் மீதான அமெரிக்காவின் தாக்குதல்களுக்குப் பிரித்தானியப் பிரதமர் சேர் கீர் ஸ்டார்மர் (Keir Starmer) முழுமையான ஆதரவு வழங்காததைத் தொடர்ந்து, பிரித்தானியாவின் கட்டுப்பாட்டில் உள்ள போக்லாந்து தீவுகள் (Falkland Islands) மீதான அந்நாட்டின் உரிமையை அங்கீகரிப்பதை அமெரிக்கா மறுபரிசீலனை செய்யக்கூடும் என, பென்டகனின் கசிந்த மின்னஞ்சல்கள் மூலம் தகவல்கள் வெளியாகியுள்ளன.

 

நேட்டோ (NATO) உறுப்பு நாடுகள் அமெரிக்காவிற்குப் போதிய ஒத்துழைப்பு வழங்காத பட்சத்தில், அவர்களின் “ஏகாதிபத்திய உடமைகள்” (Imperial possessions) என்று கருதப்படும் பகுதிகளுக்கான இராஜதந்திர ஆதரவை விலக்கிக் கொள்வது குறித்து அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஆலோசித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

 

இருப்பினும், இந்தத் தகவல்களைப் பிரித்தானியப் பிரதமரின் இல்லமான டவுனிங் வீதி (Downing Street) திட்டவட்டமாக மறுத்துள்ளது. போக்லாந்து தீவுகளின் இறையாண்மை பிரித்தானியாவிடமே உள்ளது என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும், இது குறித்துப் பல தசாப்தங்களாகத் தங்களது நிலைப்பாட்டை அமெரிக்காவிடம் தெளிவாக விளக்கியுள்ளதாகவும் பிரித்தானிய அரசு தெரிவித்துள்ளது. குறிப்பாக, 1982-ஆம் ஆண்டு நடந்த போக்லாந்து போருக்குப் பிறகு இத்தீவுகள் பிரித்தானியாவின் ஒரு அங்கமாகவே இருந்து வருகின்றன.

 

தற்போது லண்டனில் இருந்து வெளியாகும் செய்திகளின்படி, அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ள போதிலும், போக்லாந்து விவகாரத்தில் அமெரிக்காவின் இந்த “மீளாய்வு” என்பது ஒரு ஊகமாகவே பார்க்கப்படுகிறது.

இந்தப் பின்னணியில் மன்னர் சார்லஸின் அமெரிக்கப் பயணம் திட்டமிட்டபடி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin