யாழ். போதனா வைத்தியசாலையில் 40,000 உயிர்களைக் காத்த இயந்திரம் ஓய்வு: புதிய வசதிகள் விரைவில்!
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் இதய சிகிச்சை பிரிவில் கடந்த 15 ஆண்டுகளாகப் பல ஆயிரக்கணக்கான உயிர்களைக் காப்பற்றிய Cath Lab (Cardiac Catheterization Laboratory) இயந்திரம், நேற்று (2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை) தனது சேவையில் இருந்து உத்தியோகபூர்வமாக விடைபெற்றது.
இதய நோயாளிகளுக்கு சத்திரசிகிச்சை இன்றி உயர்தர சிகிச்சைகளை வழங்கி வந்த இந்த இயந்திரத்திற்குப் பதிலாக, நவீன வசதிகளுடன் கூடிய புதிய இயந்திரம் இம்மாத இறுதியில் நிறுவப்படவுள்ளது.
இந்த இயந்திரம் மூலம் பாரிய அறுவை சிகிச்சை இன்றி அஞ்சியோகிராம் (Angiogram) மற்றும் அஞ்சியோபிளாஸ்டி (Angioplasty) போன்ற சிகிச்சைகள் வழங்கப்பட்டன.
X-ray கதிர்களின் உதவியுடன் இதய இரத்தக் குழாய்களில் உள்ள அடைப்புகள், வால்வு பிரச்சினைகளைக் கண்டறிந்து, பேஸ்மேக்கர் (Pacemaker) போன்ற கருவிகளைப் பொருத்தவும் இது பயன்படுத்தப்பட்டது.
கடந்த 15 வருட காலப்பகுதியில் சுமார் 40,000-க்கும் அதிகமான நோயாளர்களின் உயிர்களைக் காக்க இந்த இயந்திரம் உதவியுள்ளது.
சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் புதிய Cath Lab இயந்திரத் தொகுதி வழங்கப்படவுள்ளது. இதன் பணிகள் இம்மாத இறுதிக்குள் நிறைவடைந்து மக்கள் சேவைக்கு வரும்.
புதிய இயந்திரம் வரும் வரை, அவசர சிகிச்சைகள் வைத்தியசாலையில் உள்ள DSA (Digital Subtraction Angiography) இயந்திரம் மூலமாகவும், வவுனியா பொது வைத்தியசாலையில் உள்ள Cath Lab வசதி மூலமாகவும் முன்னெடுக்கப்படும் என வைத்தியசாலைப் பணிப்பாளர் வைத்தியர் த. சத்தியமூர்த்தி தொிவித்தாா்.
இந்த இயந்திரத்தைச் சரியான முறையில் பராமரித்துச் சேவையாற்றிய இதய சிகிச்சை நிபுணர்கள், கதிரியக்கவியலாளர்கள், தாதியர்கள் மற்றும் பொறியியலாளர்களுக்குப் பணிப்பாளர் தனது நன்றிகளைத் தெரிவித்துக் கொண்டார்.

