பாரிஸில் அலைபேசி மின்னூட்டியால் – (Charger) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 10 பேர் படுகாயம்

பாரிஸில் அலைபேசி மின்னூட்டியால் – (Charger) ஏற்பட்ட பயங்கர தீ விபத்து: 10 பேர் படுகாயம் – ஒருவர் நிலைமை கவலைக்கிடம்!

பாரிஸ், ஏப்ரல் 5, 2026

பாரிஸின் 12-வது வட்டாரத்தில் உள்ள பிக்ஸ்பஸ் (Boulevard de Picpus) பகுதியில் அமைந்துள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் இன்று மதியம் ஏற்பட்ட தீ விபத்தில் 10 பேர் காயமடைந்துள்ளனர்.

 

இன்று ஞாயிற்றுக்கிழமை நண்பகல் 12 மணிக்கு முன்னதாக, அந்தப் பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த உந்துருளி காவல்துறையினர், ஒரு கட்டிடத்தின் தரைத்தளத்தில் இருந்து கரும்புகையும் நெருப்புப் பிழம்புகளும் வெளியேறுவதைக் கவனித்தனர்.

 

உடனடியாகச் செயல்பட்ட அவர்கள் 6 மாடிகளைக் கொண்ட அந்தத் தொடர் குடியிருப்பில் இருந்த சுமார் 15 குடியிருப்பாளர்களை அவசரமாக வெளியேற்றினர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் மதியம் 12:30 மணியளவில் தீயை முழுமையாகக் கட்டுக்குள் கொண்டு வந்தனர்.

 

காவல்துறை மற்றும் அரசு வழக்கறிஞர் அலுவலகம் நடத்திய முதற்கட்ட விசாரணையில், இந்தத் தீ விபத்து தற்செயலாக நடந்தது என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 

தரைத்தளத்தில் உள்ள ஒரு வீட்டில், பழுதடைந்த கைபேசி மின்னூட்டி (Defective Mobile Charger) ஒன்று மின் இணைப்பில் இருந்தபோது வெப்பமடைந்து அங்கிருந்த மெத்தையில் தீப்பிடித்துள்ளது.அப்போது அந்த வீட்டில் யாரும் இருக்கவில்லை.

 

கட்டிடத்தின் படிக்கட்டுப் பகுதியில் இருந்த காற்றுச் சுழற்சி (Air draft), தரைத்தளத்தில் பற்றிய தீயை மிக வேகமாக 6-வது மாடி வரை கொண்டு சேர்த்துள்ளது.

 

இந்த விபத்தில் மொத்தம் 10 பேர் காயமடைந்துள்ளனர். அவர்களில் ஒருவர் “அதிதீவிர அவசர நிலையில்” (Urgence absolue) மீட்கப்பட்டு மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளார்.எஞ்சிய 9 பேருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டிருந்தாலும், அனைவரும் தீயினால் ஏற்பட்ட நச்சுப் புகையைச் சுவாசித்ததால் (Smoke inhalation) மூச்சுத் திணறலுக்கு உள்ளாகியுள்ளனர். அவர்கள் அனைவரும் தற்போது சிகிச்சையில் உள்ளனர்.

 

பயன்பாட்டில் இல்லாத நேரங்களில் மின்னணு சாதனங்களின் இணைப்பைத் துண்டிப்பதன் அவசியத்தை இந்தச் சம்பவம் உணர்த்துகிறது. குறிப்பாக, பழுதடைந்த மின்னூட்டி கள் – (Charger )மற்றும் தரமற்ற மின் சாதனங்களைப் பயன்படுத்துவது இது போன்ற பேரழிவுகளுக்கு வழிவகுக்கும் எனப் பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர்.

Recommended For You

About the Author: admin