நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் கோவில் மகா கும்பாபிஷேகம்: கர்மாரம்பக் கிரியைகள் இன்று ஆரம்பம்!
யாழ்ப்பாணம், நல்லூர் ஸ்ரீ கைலாசநாத பிள்ளையார் ஆலயத்தின் புனராவர்த்தன ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகப் பெருவிழா எதிர்வரும் ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி (2026-04-01), புதன்கிழமை அன்று மிக விமர்சையாக நடைபெறவுள்ளது.
ஆலயத்தின் புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்த நிலையில், கும்பாபிஷேகத்திற்கான ஆரம்பகட்ட வழிபாடுகள் மற்றும் கிரியைகள் இன்றைய தினம் (2026 மார்ச் 25, புதன்கிழமை) காலை பக்திப்பூர்வமாக ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய தினம் (மார்ச் 25) காலை முதல் கிரியைகள் ஆரம்பமாகி, தொடர்ந்து வரும் நாட்களில் விசேட யாகபூஜைகள் மற்றும் வழிபாடுகள் இடம்பெறவுள்ளன.
அடியவர்கள் சுவாமி விக்கிரகங்களுக்கு எண்ணெய் காப்பு சாத்தும் நிகழ்வு மார்ச் 29 ஆம் திகதி காலை 6:00 மணி முதல் மார்ச் 30 ஆம் திகதி மாலை 6:00 மணி வரை தொடர்ந்து நடைபெறும்.
ஏப்ரல் மாதம் 1 ஆம் திகதி, புதன்கிழமை காலை 9:50 மணி முதல் 11:00 மணி வரை உள்ள சுப முகூர்த்த நேரத்தில் மகா கும்பாபிஷேகம் ஶ்ரீலஶ்ரீ சோமசுந்தரப் பரமாச்சாரிய சுவாமிகளின் ஆசியுடன் நடைபெறும்.
எண்ணெய் காப்பு சாத்தும் தினங்களில் பெருமளவிலான அடியவர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், ஆலய நிர்வாகத்தினர் சிறப்பு ஏற்பாடுகளை முன்னெடுத்துள்ளனர். கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நல்லூர் வீதிகளில் போக்குவரத்து மாற்றங்கள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.


