570 மீற்றர் வீதிக்கு 76 நாட்கள்! ஒப்பந்தக்காரரின் அலட்சியத்தால் மக்கள் அவதி

570 மீற்றர் வீதிக்கு 76 நாட்கள்! ஒப்பந்தக்காரரின் அலட்சியத்தால் மக்கள் அவதி: தெல்லிப்பழையில் காரசார விவாதம்!

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில், வெறும் 570 மீற்றர் நீளமான வீதியைப் புனரமைக்க 76 நாட்கள் எடுத்துக்கொண்ட ஒப்பந்தக்காரரின் மெத்தனப்போக்கு மற்றும் அதிகாரிகளின் பாராமுகம் குறித்துக் கடுமையான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

 

 

வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர் சீத்தா சிவசுப்பிரமணியம், நேற்று முன்தினம் (2026 மார்ச் 23, திங்கட்கிழமை) நடைபெற்ற ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் இந்த விவகாரத்தை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தினார்.

 

 

கடந்த 2025 ஆம் ஆண்டு பிரதேச செயலக நிதி ஒதுக்கீட்டின் கீழ், வலி. வடக்கு பிரதேச சபைக்கு உட்பட்ட 43 வீதிகளைப் புனரமைக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டது. அதில் மாங்கொல்லை வீதி (570 மீற்றர் நீளம், 3.90 மீற்றர் அகலம்) புனரமைப்புப் பணியைச் சிவா கட்டடத்தாரர் எனும் நிறுவனம் ஒப்பந்த அடிப்படையில் பொறுப்பேற்றிருந்தது.

 

 

: 2025 டிசம்பர் 27 ஆம் திகதி அடிக்கல் நாட்டப்பட்ட போதிலும், வேலைகள் உரிய நேரத்தில் ஆரம்பிக்கப்படவில்லை. “பொங்கலுக்கு முன் முடியும்” எனப் பிரதேச செயலர் வாக்குறுதி அளித்தும், பணிகள் இழுபறியாகி மார்ச் 13 அன்றே நிறைவடைந்துள்ளன.

 

ஒப்பந்தக்காரர் வேலையைச் செய்யாதபோது, அதிகாரிகளே தலையிடுவதற்குப் பதிலாக, பிரதேச சபை உறுப்பினரிடமே “நீங்களே ஒப்பந்தக்காரருடன் பேசி வேலையை முடியுங்கள்” என அவரது தொலைபேசி இலக்கத்தைக் கொடுத்துக் கைகழுவியுள்ளனர்.

 

வீதியின் நடுவே இருந்த மின்கம்பத்தின் இழுவைக் கம்பியை அகற்றுவதில் ஏற்பட்ட தாமதம் மற்றும் அதற்கான செலவீனங்கள் தொடர்பாக அதிகாரிகள் காட்டிய மெத்தனப்போக்கு பணியை மேலும் தாமதப்படுத்தியுள்ளது.

 

வீதியில் கற்களைப் பரப்பிவிட்டு நீண்ட நாட்கள் வேலை செய்யாமல் விட்டதால், அந்த வீதியைப் பயன்படுத்திய பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.

 

 

பிரதேச சபை உறுப்பினரின் இந்தக் காட்டமான புகாரைத் தொடர்ந்து, ஒருங்கிணைப்பு குழுத் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் ச. ஸ்ரீபவானந்தராசா தலைமையில் பின்வரும் முடிவுகள் எட்டப்பட்டன:

 

பிரதேச செயலகத்தினால் புனரமைக்கப்பட்ட 43 வீதிகளின் நிதிப்பயன்பாடு மற்றும் ஒப்பந்த நடைமுறைகள் குறித்து மீள் கணக்காய்வு (Audit) செய்யப்பட வேண்டும்.

 

76 நாட்கள் எடுத்துப் புனரமைக்கப்பட்ட மாங்கொல்லை வீதி உட்பட அனைத்து வீதிகளின் தரம் (Quality Control) குறித்துத் தொழில்நுட்ப வல்லுநர்களைக் கொண்டு மீள் சோதனை நடத்தப்பட வேண்டும்.

Recommended For You

About the Author: admin