ரஷ்யாவின் முக்கிய எண்ணெய் ஏற்றுமதி முனையங்கள் முடக்கம்: உக்ரைன் அதிரடித் தாக்குதல்!
ரஷ்யாவின் எரிசக்தி உட்கட்டமைப்புகளைக் குறிவைத்து உக்ரைன் நடத்திய பாரிய ஆளில்லா விமானத் தாக்குதல்கள் காரணமாக, அந்நாட்டின் மிகப்பெரிய எண்ணெய் ஏற்றுமதி மையங்கள் முடங்கியுள்ளன.
பால்டிக் கடலில் அமைந்துள்ள பிரிமோர்ஸ்க் (Primorsk) மற்றும் உஸ்ட்-லுகா (Ust-Luga) ஆகிய இரு முக்கிய எண்ணெய் ஏற்றுமதித் துறைமுகங்கள் தாக்கப்பட்டுள்ளன.
பிரிமோர்ஸ்க் துறைமுகத்தில் உள்ள எரிபொருள் சேமிப்பு டாங்கிகள் தீப்பிடித்து எரிந்தன. இதனால் அங்கிருந்து கச்சா எண்ணெய் மற்றும் டீசல் ஏற்றுமதி செய்யும் பணிகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.
பிரிமோர்ஸ்க் முனையம் நாளொன்றுக்கு சுமார் 1 மில்லியன் பேரல் கச்சா எண்ணெயை ஏற்றுமதி செய்யும் திறன் கொண்டது. உஸ்ட்-லுகா முனையம் சுமார் 700,000 பேரல்களைக் கையாள்கிறது.
உஸ்ட்-லுகா முனையம் மார்ச் 23 பெப்ரவரி மதியம் மீண்டும் செயல்பாட்டிற்கு வந்தாலும், பிரிமோர்ஸ்க் முனையம் தொடர்ந்து மூடப்பட்டுள்ளது.
ஏற்கனவே ஈரான் – இஸ்ரேல் பதற்றம் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விநியோகத்தில் தட்டுப்பாடு நிலவி வரும் சூழலில், ரஷ்யாவின் இந்த ஏற்றுமதி முடக்கம் உலகளாவிய எண்ணெய் விலையில் மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷ்யாவின் போர் பொருளாதாரத்தை முடக்கும் நோக்கில், அந்நாட்டின் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் ஏற்றுமதி மையங்கள் மீது உக்ரைன் சமீபகாலமாகத் தனது தாக்குதல்களைத் தீவிரப்படுத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

