அமெரிக்காவின் கடலடி போர் ஆதிக்கத்தை சீனா முறியடிக்கப் போகிறதா?

அமெரிக்காவின் கடலடி போர் ஆதிக்கத்தை சீனா முறியடிக்கப் போகிறதா? இந்த ஆதிக்க போட்டியில் இலங்கையும் இந்து சமுத்திரமும் சிக்குமா?

கடலடிப் போருக்கான சீனாவின் பாரிய உளவு நடவடிக்கை: உலக நாடுகளுக்கு எச்சரிக்கை!

சீனா தனது கடற்படை வலிமையை உலகளவில் நிலைநிறுத்தும் நோக்கில் பசிபிக், இந்திய மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களில் பாரிய அளவிலான கடலடி வரைபடமாக்கல் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது. “வெளிப்படையான கடல்” (Transparent Ocean) எனும் பெயரில் சிவில் ஆராய்ச்சித் திட்டமாக இது முன்னெடுக்கப்பட்டாலும், இதன் பின்னணியில் ஆழமான இராணுவ இலக்குகள் இருப்பதாக பாதுகாப்பு ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

 

மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள்

சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் மற்றும் சென்சார் வலையமைப்புகள் பின்வரும் முக்கிய பகுதிகளில் தீவிரமாகச் செயற்பட்டு வருகின்றன:

 

இந்தியா மற்றும் இலங்கை: இந்தியப் பெருங்கடலில் இந்தியா மற்றும் இலங்கையைச் சுற்றியுள்ள பகுதிகளில் சென்சார்கள் மற்றும் மிதவைகளை சீனா நிலைநிறுத்தியுள்ளது. குறிப்பாக ‘நைன்டி ஈஸ்ட் ரிட்ஜ்’ (Ninety East Ridge) மற்றும் மலாக்கா நீரிணை போன்ற முக்கிய வர்த்தகப் பாதைகளில் சீனா தீவிர கவனம் செலுத்துகின்றது.

 

பசிபிக் பிராந்தியம்: தாய்வான், குவாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளைச் சுற்றியுள்ள அமெரிக்க இராணுவ மையங்களுக்கு அருகாமையிலும், ஹவாய் மற்றும் பப்புவா நியூ கினியா போன்ற மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளிலும் இந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

ஆர்க்டிக் கடல்: 2030-ம் ஆண்டிற்குள் “துருவப் பெரும் வல்லரசாக” உருவெடுக்கும் நோக்கில், அலாஸ்காவிற்கு வடக்கே உள்ள கடல் வழிகளை சீனா வரைபடமாக்கி வருகின்றது.

 

சிவில் – இராணுவ இணைப்பு (Civil-Military Fusion)

கடல்சார் வெப்பநிலை, உப்புத்தன்மை மற்றும் நீரோட்டங்கள் குறித்த தரவுகள் காலநிலை மாற்ற ஆய்வுகளுக்குப் பயன்படுத்தப்படுவதாக சீனா கூறினாலும், அதே தரவுகள் நீர்மூழ்கிக் கப்பல்களின் நடமாட்டத்திற்கும், சோனார் (Sonar) கருவிகளின் துல்லியத்தை அதிகரிப்பதற்கும் மிக அவசியமானவை. அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறியவும், சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கண்டறிய முடியாதவாறு மறைத்து இயக்கவும் இந்தத் தரவுகள் பயன்படுத்தப்படுகின்றன.

 

அமெரிக்காவிற்கான சவால்கள்!

பல தசாப்தங்களாக கடலடிப் போரில் அமெரிக்க கடற்படை கொண்டிருந்த ஆதிக்கத்தை முறியடிக்க சீனா முயல்கிறது. இந்த விரிவான சுற்றுச்சூழல் மாதிரிகள் மூலம், சீனா தனது நீர்மூழ்கிக் கப்பல்களை மறைவான இடங்களில் நிலைநிறுத்தவும், சர்வதேச கடல் வழித்தடங்களைக் கட்டுப்படுத்தவும் வாய்ப்புள்ளதாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

Recommended For You

About the Author: admin