ஹார்முஸ் ஜலசந்தியைத் திறக்க 48 மணிநேரக் கெடு:
ஈரானின் மின்னுற்பத்தி நிலையங்களை அழிப்பதாக ட்ரம்ப் பகிரங்க எச்சரிக்கை!
மத்திய கிழக்கில் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் போர்ச் சூழலில், உலகளாவிய கடற்போக்குவரத்து மற்றும் எரிசக்தி விநியோகத்தின் உயிர்நாடியாக விளங்கும்
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஈரானுக்கு மிகவும் கடுமையான இறுதி எச்சரிக்கையொன்றை விடுத்துள்ளார்.
ட்ரூத் சோஷியலில் ட்ரம்பின் பகீர் பதிவு:
தனது உத்தியோகபூர்வ சமூக வலைத்தளமான ‘ட்ரூத் சோஷியல்’ (Truth Social) ஊடாகப் பதிவொன்றை வெளியிட்டுள்ள அதிபர் ட்ரம்ப்,
ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலுமின்றி ஈரான் உடனடியாகத் திறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், “சரியாக இந்த நேரத்திலிருந்து அடுத்த 48 மணித்தியாலங்களுக்குள், ஹார்முஸ் ஜலசந்தியை எவ்வித அச்சுறுத்தலுமின்றி ஈரான் முழுமையாகத் திறக்காவிட்டால்
(FULLY OPEN, WITHOUT THREAT), அமெரிக்க ஐக்கிய நாடுகள் ஈரானின் பல்வேறு மின்னுற்பத்தி நிலையங்களைத் தாக்கி அடியோடு நிர்மூலமாக்கும் (obliterate their various POWER PLANTS).
அதுவும் ஈரானின் மிகப்பெரிய மின்நிலையத்திலிருந்து முதலாவது தாக்குதல் ஆரம்பமாகும் (STARTING WITH THE BIGGEST ONE FIRST!)” எனப் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.
இருளில் மூழ்கும் அபாயத்தில் ஈரான்:
ட்ரம்பின் இந்த அறிவிப்பானது, போரின் இலக்குகளை இராணுவத் தளங்கள் என்பதிலிருந்து முற்றுமுழுதாக நாட்டின் பொது உட்கட்டமைப்பு வசதிகளை நோக்கி நகர்த்தியுள்ளதைக் காட்டுகிறது. மின்னுற்பத்தி நிலையங்கள் அழிக்கப்பட்டால்,
ஈரானின் வைத்தியசாலைகள், தகவல் தொடர்பு மையங்கள், நீர் விநியோகம் என ஒட்டுமொத்த நாடும் இருளிலும் பெரும் மனிதாபிமானப் பேரவலத்திலும் மூழ்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
உலக எண்ணெய் விநியோகத்தைக் காப்பதற்காக அமெரிக்கா எடுத்துள்ள இந்த 48 மணிநேரக் கெடு, மத்திய கிழக்கைப் பதற்றத்தின் உச்சத்திற்குக் கொண்டு சென்றுள்ளது.

