ஈரானிய தூதரக அதிகாரிகள் வெளியேற சவூதி அரேபியா அதிரடி உத்தரவு!
சவூதி அரேபியாவிற்கும் ஈரானுக்கும் இடையிலான உறவில் மீண்டும் பதற்றம் அதிகரித்துள்ள நிலையில்,
சவூதி அரேபியாவில் உள்ள ஈரானிய தூதரகத்தின் இராணுவ இணைப்பாளர் (Military Attaché) மற்றும் அவரது பணியாளர்களை 24 மணிநேரத்திற்குள் நாட்டை விட்டு வெளியேறுமாறு சவூதி வெளியுறவு அமைச்சு உத்தரவிட்டுள்ளது.
ஈரானிய தூதரகத்தின் இராணுவ இணைப்பாளர், அவரது உதவியாளர் மற்றும் மூன்று தூதரகப் பணியாளர்கள் என மொத்தம் ஐந்து பேர் ‘ஏற்றுக்கொள்ளத்தகாத நபர்களாக’ (Persona non grata) அறிவிக்கப்பட்டுள்ளனர்.
காரணம்: சவூதி அரேபியாவின் இறையாண்மை மற்றும் பொதுமக்கள் மீது ஈரான் தொடர்ந்து நடத்தி வரும் ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதல்கள் சர்வதேச உடன்படிக்கைகள், பெய்ஜிங் ஒப்பந்தம் மற்றும் ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்புச் சபை தீர்மானம் 2817 (2026) ஆகியவற்றை அப்பட்டமாக மீறுவதாக சவூதி அரேபியா கண்டனம் தெரிவித்துள்ளது.
கடந்த 2023-ம் ஆண்டு சீனா முன்னிலையில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்பட்ட நல்லுறவு ஒப்பந்தம், தற்போது நிலவி வரும் போர்ச் சூழலால் பெரும் பின்னடைவைச் சந்தித்துள்ளது. கடந்த வாரம் கத்தாரும் இதேபோன்ற நடவடிக்கையை எடுத்திருந்தது குறிப்பிடத்தக்கது.
சவூதி அரேபியா தனது பாதுகாப்பு மற்றும் நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கும் என்றும், இத்தகைய தாக்குதல்கள் இரு நாடுகளுக்கும் இடையிலான எதிர்கால உறவில் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளது.

