இஸ்ரேலின் ஆராட் நகர் மீது ஈரானின் நேரடி ஏவுகணைத் தாக்குதல்:
64 பேர் படுகாயம், வைத்தியசாலையில் அவசரகால நிலை பிரகடனம்!
இஸ்ரேலின் தெற்குப் பகுதியில் அமைந்துள்ள டிமோனா (Dimona) நகர் மீது ஈரான் பாரிய ஏவுகணைத் தாக்குதலை நடத்தி 47 பேர் காயமடைந்த அதிர்ச்சி விலகும் முன்னரே,
அதற்கடுத்த சில மணிநேரங்களில் ஆராட் (Arad) நகர் மீதும் ஈரான் மற்றொரு நேரடி ஏவுகணைத் தாக்குதலை (Direct hit) மேற்கொண்டுள்ளது.
குடியிருப்புகள் மத்தியில் வெடித்த ஏவுகணை:
இஸ்ரேலியத் தீயணைப்புச் சேவைப் பிரிவினர் விடுத்துள்ள உத்தியோகபூர்வ அறிக்கையின்படி, ஆராட் நகரத்தின் மையப்பகுதியில் உள்ள குடியிருப்புக் கட்டடங்களுக்கு மத்தியிலேயே இந்த ஈரானிய ஏவுகணை நேரடியாகத் தாக்கியுள்ளது.
இதனால் அப்பகுதியில் மாபெரும் அழிவுகள் மற்றும் உட்கட்டமைப்புச் சேதங்கள் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
64 பேர் படுகாயம், அவசரகால நிலை:
இந்தத் தாக்குதலால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து இஸ்ரேலின் தேசிய அவசரகால மருத்துவச் சேவையான ‘மேகன் டேவிட் அடோம்’ (Magen David Adom – MDA) தனது டெலிகிராம் பக்கத்தில் அவசரத் தகவல்களைப் பகிர்ந்துள்ளது.
குறித்த தாக்குதலில் குறைந்தது 64 பேர் காயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் 5 வயதுச் சிறுமி உட்பட 7 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக (Serious condition) இருப்பதாகவும்,
15 பேர் மிதமான காயங்களுக்கும், 42 பேர் இலேசான காயங்களுக்கும் உள்ளாகியுள்ளதாகவும் MDA அறிவித்துள்ளது.
காயமடைந்தவர்களை மீட்பதற்காக அதிகளவிலான அம்பியூலன்ஸ்கள் மற்றும் மீட்பு ஹெலிகாப்டர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. பெருமளவானோர் படுகாயமடைந்து ஒரே நேரத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளதால்,
ஆராட் நகரில் உள்ள பிரதான வைத்தியசாலையில் தற்போது ‘அவசரகால நிலை’ (State of emergency) பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய வான்பாதுகாப்பு அரண்களைத் தாண்டி ஈரானிய ஏவுகணைகள் தொடர்ச்சியாக இஸ்ரேலிய நகரங்களை அழித்து வருவது, ஒட்டுமொத்த இஸ்ரேலிய மக்கள் மத்தியிலும் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.

