காலி நிலத்தை காட்டி கோடிக்கணக்கில் மோசடி.. 42 பேர் மீது பாய்ந்தது வழக்கு..!!
MH – ஜல்கான் மாவட்டத்தில், வானிலை அடிப்படையிலான ‘பயிர் காப்பீட்டுத் திட்டத்தில்’ (Fasal Bima Yojana) சுமார் 75 கோடியே 39 லட்சம் ரூபாய் மதிப்பிலான பிரம்மாண்ட ஊழல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
நிலத்தில் வாழை விவசாயமே செய்யாமல், ஆவணங்களில் வாழைத் தோட்டம் இருப்பதாகக் காட்டி காப்பீட்டு நிறுவனத்தையும் அரசாங்கத்தையும் ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக மார்ச் 18-ஆம் தேதி இரவு, 6 தாலுகாக்களைச் சேர்ந்த 42 பொதுச் சேவை மைய (CSC) உரிமையாளர்கள் மீது அதிரடியாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சுமார் 45 ஆயிரம் ஹெக்டேர் நிலத்தில் வாழை பயிரிடப்படாமலேயே, 29 ஆயிரம் போலி விவசாயிகளின் பெயரில் காப்பீடு செய்யப்பட்டுள்ளது அதிகாரிகளை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
தரிசு நிலங்கள் மற்றும் பிற பயிர்கள் உள்ள நிலங்களை வாழைத் தோட்டமாக ஆன்லைன் போர்ட்டலில் தவறாகப் பதிவு செய்து, கோடிக்கணக்கான ரூபாய் இழப்பீட்டுத் தொகையைத் தட்டிப்பறிக்கச் சதி நடந்தது அம்பலமாகியுள்ளது. விவசாய ஆணையர் அலுவலகத்தின் உத்தரவின் பேரில் நடத்தப்பட்ட இந்த அதிரடி சோதனையில், இந்த மெகா மோசடியில் தொடர்புடைய மற்ற நபர்கள் குறித்தும் போலீஸாரும் விவசாயத் துறையினரும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

