போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கட்டும் : ரமழான் வாழ்த்துச் செய்தியில் சஜித் பிரேமதாச
ரமழான் நோன்பை நிறைவு செய்யும் இந்த வேளையில், இஸ்லாம் கற்றுத் தரும் மானுட தர்மங்களைச் சிந்திப்பது அவசியம் எனச் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
நம்பிக்கை, தொழுகை, நோன்பு, ஸகாத் மற்றும் ஹஜ் ஆகிய ஐந்து கடமைகளும் அமைதி மற்றும் நல்லிணக்கம் நிறைந்த சமூகத்திற்கான வழிகாட்டல்கள் என அவர் தனது வாழ்த்துச் செய்தியில் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் தற்போது நிலவும் போர்ச் சூழலுக்குத் தீர்வு காண இஸ்லாம் காட்டும் பொறுமை, கருணை மற்றும் மனிதநேயமே மிக முக்கியமான வழி என எதிர்க்கட்சித் தலைவர் வலியுறுத்தியுள்ளார்.
வெறுப்பைக் கருணையாலும், பிளவுகளை ஒற்றுமையாலும் முறியடிக்கும் ஒரு செயல்திட்டத்தின் மூலமே தற்போதைய உலக நெருக்கடிகளுக்குத் தீர்வு காண முடியும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மோதலைத் தீர்ப்பதற்கு வலிமை அல்லது சட்டம் மட்டும் போதாது, மக்களின் சிந்தனை நல்வழியில் செல்வதே முக்கியம் எனத் தெரிவித்த சஜித் பிரேமதாச, இத்தகைய உயர்ந்த சிந்தனைகள் உலக மக்களின் மனங்களில் ஒளிர்ந்தால் போரின் தீப்பொறிகள் அணைந்து அமைதி பிறக்கும் எனத் தெரிவித்தார்.
இலங்கைவாழ் இஸ்லாமிய மக்கள் அனைவருக்கும் அவர் தனது இனிய ஈதுல் பித்ர் நல்வாழ்த்துகளைப் பகிர்ந்து கொண்டுள்ளார்.

