ஈரான் ட்ரோன்களை எதிர்கொள்ள வளைகுடா நாடுகளுக்கு 201 இராணுவ நிபுணர்களை அனுப்பியது உக்ரைன்!
ஈரானிய தயாரிப்பு ‘ஷாஹெட்’ (Shahed) தற்கொலைத் தாக்குதல் ட்ரோன்களிடமிருந்து (Drones) பாதுகாப்பதில் வளைகுடா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளுக்கு உதவுவதற்காக, உக்ரைன் தனது 201 இராணுவ நிபுணர்களை அந்தப் பிராந்தியத்திற்கு அனுப்பியுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், சவுதி அரேபியா ஆகிய நாடுகளில் உக்ரைனின் ட்ரோன் எதிர்ப்பு நிபுணர்கள் ஏற்கனவே களமிறங்கியுள்ளனர். குவைத் நாட்டிற்கும் நிபுணர்கள் விரைந்து கொண்டிருக்கின்றனர். மேலும் 34 நிபுணர்கள் தயார் நிலையில் உள்ளனர்.
லண்டனில் பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர்களிடையே உரையாற்றிய உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் ஜெலென்ஸ்கி இத்தகவலை உறுதிப்படுத்தினார். “ரஷ்யாவும் ஈரானும் வெறுப்பால் இணைந்த சகோதரர்கள்; அவர்கள் ஆயுதங்களாலும் இணைந்துள்ளனர்” என அவர் சாடினார்.
வளைகுடா பிராந்தியத்தில் பயன்படுத்தப்படும் ஈரானிய ஷாஹெட் ட்ரோன்களில் ரஷ்ய பாகங்கள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக ஜெலென்ஸ்கி ஆதாரங்களுடன் குற்றம் சாட்டினார்.
உக்ரைன் தற்போது ஒரு நாளைக்கு 2,000 ட்ரோன் இடைமறிப்பான்களை (Interceptor drones) உற்பத்தி செய்யும் திறன் கொண்டது. இதில் பாதியைத் தனது தற்காப்பிற்கு வைத்துக்கொண்டு, மீதமுள்ள 1,000 ட்ரோன்களை தனது நட்பு நாடுகளுக்கு வழங்க உக்ரைன் தயாராக உள்ளது.
பாதுகாப்புத் துறையில் ஒத்துழைக்க லண்டனும் கீவ்வும் (Kyiv) புதிய ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. இதன் மூலம் உக்ரைனின் போர்க்கள அனுபவமும் பிரித்தானியாவின் தொழில் நுட்பமும் இணைந்து புதிய ட்ரோன்கள் தயாரிக்கப்படவுள்ளன.
இந்த நடவடிக்கை மத்திய கிழக்கில் ஈரான் முன்னெடுக்கும் ட்ரோன் பயங்கரவாதத்தைத் தடுக்க உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

