“நாங்கள் இந்தப் போரில் பங்கேற்கவில்லை”-இம்மானுவேல் மக்ரோன்
மத்திய கிழக்கில் நிலவி வரும் போர்ச் சூழல் குறித்து எலிசி (Élysée) மாளிகையில் இன்று நடைபெற்ற பிரெஞ்சு பாதுகாப்பு சபை கூட்டத்திற்குப் பிறகு, அதிபர் இம்மானுவேல் மக்ரோன் பிரான்ஸின் நிலையைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
தற்போது நடைபெற்று வரும் மோதல்களில் பிரான்ஸ் ஒரு நேரடித் தரப்பு (Pas partie prenante) அல்ல என்பதை அவர் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். குறிப்பாக, குண்டுவீச்சுகள் (Bombardements) தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த இக்கட்டான சூழலில், (ஹோ) ஓர்முஸ் நீரிணையைப் பாதுகாக்கும் இராணுவ நடவடிக்கைகளில் பிரான்ஸ் தற்போதைக்கு ஈடுபடாது என்று அவர் கூறியுள்ளார்.
இருப்பினும், போர்ச் சூழல் சற்று “அமைதியடைந்த பிறகு” (Plus calme), அந்த முக்கியமான கடல் வழிப்பாதையில் சரக்குக் கப்பல்களுக்குப் பாதுகாப்பான துணையாகச் செல்லும் “பாதுகாப்புச் சேவை” (Système d’escorte) வழங்கும் பணிகளில் மற்ற நாடுகளுடன் இணைந்து பிரான்ஸ் பங்கேற்கத் தயாராக உள்ளது. இந்தப் பணியானது ஒரு வலிமையான இராணுவத் தாக்குதல் நடவடிக்கை (Opération de vive force) கிடையாது என்றும், இது தற்போதைய போரிலிருந்து முற்றிலும் தனித்துச் செயல்படும் ஒரு தற்காப்பு முயற்சி என்றும் அவர் விளக்கமளித்துள்ளார்.
இந்த நடவடிக்கையை முன்னெடுப்பதற்கு ஈரானுடன் முறையான பேச்சுவார்த்தைகள் மற்றும் “மோதல் தவிர்ப்பு” (Déconfliction) குறித்த ஆலோசனைகள் அவசியம் என்பதை மேக்ரான் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக இந்தியா மற்றும் பிராந்தியத்தின் பிற கூட்டாளிகளுடன் பிரான்ஸ் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியுள்ளது. பிரான்ஸின் நோக்கம் என்பது ஒரு தூய தற்காப்பு நிலை (Position purement défensive), அதாவது தனது நாட்டு குடிமக்களைப் பாதுகாப்பது மற்றும் நட்பு நாடுகளுக்குத் தேவையான ஆதரவை வழங்குவது மட்டுமே என்று அவர் சுருக்கமாகக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விவகாரத்தில் பிரான்ஸின் நிலைப்பாடு ஏனைய ஐரோப்பிய மற்றும் நேட்டோ (Otan) நாடுகளின் முடிவுகளுடன் ஒத்துப்போகிறது. ஜெர்மன் அதிபர் Friedrich Merz மற்றும் பிரித்தானிய பிரதமர் ஆகியோர் (ஹோ )ஓர்முஸ் நீரிணையில் நேட்டோ தலையிடுவதை ஏற்கனவே நிராகரித்துள்ளனர். ஐரோப்பிய ஒன்றியத்தின் “அஸ்பைட்ஸ்” (Aspides) எனப்படும் கடல்சார் பாதுகாப்புப் பணியின் வரம்பை விரிவுபடுத்தவும் தற்போது விருப்பமில்லை என்று அதன் வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கலாஸ் (Kaja Kallas) தெரிவித்துள்ளார்.
சுருக்கமாகச் சொன்னால், பெரும் வல்லரசு நாடுகள் எவையும் தற்போதைய நிலையில் இந்தப் போரில் நேரடியாகத் தங்களை இணைத்துக்கொள்ள விரும்பவில்லை என்பது மக்ரோனின் பேச்சிலிருந்து தெளிவாகிறது.

