இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையில் கொழும்பில் போராட்டம்..!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு ஆதரவாக பத்தரமுல்லே சீலரதன தேரர் தலைமையில் கொழும்பில் போராட்டம்..!

​இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுக்குத் தனது மேலான ஆதரவை வெளிப்படுத்தும் வகையில், ஜனசெத பெரமுன கட்சியின் தலைவர் பத்தரமுல்லே சீலரத்ன தேரர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்றிணைந்து இன்று(09.03.2026) கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரகத்திற்கு முன்பாக விசேட போராட்டமொன்றை முன்னெடுத்தனர்.

இந்தப் போராட்டத்தின் போது “இஸ்ரேலுக்கு வெற்றி கிடைக்கட்டும், அமெரிக்காவுக்கு வெற்றி கிடைக்கட்டும்” எனத் தேரரும் அவரது ஆதரவாளர்களும் உரக்க முழக்கமிட்டதுடன், இலங்கையில் நிலவிய பயங்கரவாதத்தை ஒழிப்பதற்கு இஸ்ரேல் வழங்கிய அளப்பரிய இராணுவ மற்றும் ஏனைய உதவிகளை நாடு ஒருபோதும் மறக்க முடியாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

​அதேவேளை, ஈரான் மற்றும் பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகச் செயல்படும் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மானின் போக்கைக் கடும் வார்த்தைகளால் விமர்சித்த தேரர், அவர் ஒட்டுமொத்த உலக மக்களுக்காகப் பேசாமல் ஒரு குறிப்பிட்ட மதச் சார்புத் தரப்புக்காக மாத்திரம் குரல் கொடுப்பதாகக் குற்றம் சாட்டினார்.

மேலும், ஈரான் ஒரு தீவிரவாதப் போக்குடைய நாடு என வர்ணித்த அவர், ஈரானியர்களுக்கு இலங்கையில் தஞ்சம் புகவோ அல்லது எவ்வித ஆதரவோ வழங்க இடமளிக்கக் கூடாது எனவும் வலியுறுத்தினார்.
​அமெரிக்கா மற்றும் இலங்கைக்கிடையே கையெழுத்திடப்பட்ட ஒப்பந்தங்கள் குறித்து நாட்டு மக்களுக்கும், அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் முறையான தெளிவு இல்லை எனத் தெரிவித்த அவர், இது குறித்து அமெரிக்கத் தூதுவரிடம் தான் விளக்கம் கோரவுள்ளதாகவும் இதன்போது குறிப்பிட்டார்.

அத்துடன், ரோஹிங்கியா மற்றும் பாலஸ்தீன அகதிகள் இலங்கைக்குள் நுழைவது குறித்து முறையான விசாரணை நடத்தி அவர்களை வெளியேற்ற வேண்டும் எனவும், எக்காரணம் கொண்டும் இலங்கையை முஸ்லிம் தீவிரவாத நாடாக மாற்ற இடமளிக்கப் போவதில்லை எனவும் பத்தரமுல்லே சீலரதன தேரர் இதன்போது கடும் எச்சரிக்கை விடுத்தார்.

Recommended For You

About the Author: admin