கச்சதீவு திருவிழா இன்று ஆரம்பம்: குறிகாட்டுவானில் குவியும் யாத்திரிகர்கள்
புனித அந்தோனியார் ஆலயத்தின் வருடாந்தத் திருவிழா இன்றைய தினம் வெள்ளிக்கிழமை (பெப்ரவரி 27) உத்தியோகபூர்வமாக ஆரம்பமாகியுள்ளது. இதனையொட்டி கச்சதீவு நோக்கிச் செல்வதற்காக யாழ்ப்பாணம், குறிகாட்டுவான் இறங்குதுறையில் பல நூற்றுக்கணக்கான யாத்திரிகர்கள் அதிகாலை முதலே குவிந்த வண்ணம் உள்ளனர்.
பயண ஒழுங்குகள் மற்றும் நேரக் கட்டுப்பாடு
யாத்திரிகர்களின் பாதுகாப்பான பயணத்திற்காக விசேட படகுச் சேவைகள் மற்றும் நேரக் கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன
குறிகாட்டுவான் இறங்குதுறையிலிருந்து இன்று காலை 5.00 மணி முதல் பிற்பகல் 2.00 மணி வரை படகுச் சேவைகள் தொடர்ச்சியாக இடம்பெறும்.
இன்று பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் கச்சதீவிற்கான கடற்போக்குவரத்து சேவைகள் முற்றாக நிறுத்தப்படும். எனவே, யாத்திரிகர்கள் குறித்த நேரத்திற்கு முன்னதாகத் தமது பயணத்தை மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
ஒரு நபருக்கான ஒரு வழிப் படகுப் பயணக் கட்டணம் ரூபாய் 1,200 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன்று மாலை ஆலயத்தில் விசேட நற்கருணை ஆராதனையும், மாலை வழிபாடுகளும் நடைபெறவுள்ளன. நாளை சனிக்கிழமை காலை திருவிழாத் திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட்டுத் திருவிழா நிறைவுபெறவுள்ளது.
யாத்திரிகர்கள் தமக்குத் தேவையான குடிநீர் மற்றும் இன்றைய தினத்திற்கான உணவுகளைத் தாமே கொண்டு வருமாறு ஏற்கனவே மாவட்ட செயலகத்தினால் அறிவுறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

