நெருங்கிய நண்பருக்கான செஞ்சோற்றுக் கடனோ? சுரேஷ் சல்லே கைது: “தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல்” என்கிறார் அலி சப்ரி
முன்னாள் அரச புலனாய்வுப் பிரிவு (SIS) பணிப்பாளர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சல்லே கைது செய்யப்பட்டமை குறித்து முன்னாள் அமைச்சர் அலி சப்ரி தனது கடும் கண்டனத்தையும் கவலையையும் வெளியிட்டுள்ளார்.
அரசியல் போட்டிகளுக்காக தேசிய பாதுகாப்பு நிறுவனங்களை ஒரு கருவியாகப் பயன்படுத்துவது ஆபத்தானது. இது தற்காலிக அரசியல் லாபத்தைத் தந்தாலும், நீண்ட கால அடிப்படையில் நாட்டின் பாதுகாப்புக் கட்டமைப்பைச் சிதைத்துவிடும்.
நாட்டைப் பாதுகாத்த உயர் அதிகாரிகளைத் தண்டிப்பது அல்லது அவர்களைக் கீழ்த்தரமாக நடத்துவது, தற்போது பணியில் இருக்கும் பாதுகாப்புப் படையினரின் மன உறுதியைக் குலைக்கும் செயலாக அமையும்.
தேசத்தைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு இது ஒரு கவலையளிக்கக் கூடிய செய்தியைச் சொல்கிறது என அவர் எச்சரித்துள்ளார்.
2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளின் ஒரு பகுதியாகவே சுரேஷ் சல்லே தற்போது கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மீதான குற்றச்சாட்டுகள் மற்றும் விசாரணை நடைமுறைகள் குறித்து அரசியல் களத்தில் மாறுபட்ட கருத்துக்கள் நிலவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
தேசிய பாதுகாப்பு என்பது அரசியல் உள்நோக்கங்களுக்கு அப்பாற்பட்டது எனவும், பாதுகாப்பு நிறுவனங்களின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும் எனவும் அலி சப்ரி வலியுறுத்தியுள்ளார்.
தேசிய பாதுகாப்பு போர்வைக்குள் நன்றிக் கடன்?

