ராகுல் காந்தி சுல்தான்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையானார்
மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு எதிராக 2018-ல் தெரிவித்த கருத்து தொடர்பான அவதூறு வழக்கில் இன்று (பெப்ரவரி 20, 2026) உத்தரபிரதேசத்தின் சுல்தான்பூர் (Sultanpur) நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார்.
இன்று காலை சுல்தான்பூர் நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது வாக்குமூலத்தைப் பதிவு செய்த ராகுல் காந்தி “இந்த வழக்கு அரசியல் உள்நோக்கம் கொண்டது” என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
சுமார் 20 நிமிடங்கள் நீதிமன்ற நடவடிக்கைகள் நீடித்தன. இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை நீதிமன்றம் மார்ச் 9, 2026 ஆம் திகதிக்கு ஒத்திவைத்துள்ளது. அன்றைய தினம் ராகுல் காந்தி தரப்பு தனது தரப்பு ஆதாரங்களைச் சமர்ப்பிக்க வேண்டும்.
இந்திய சட்டத்தின்படி (மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951), ஒரு நாடாளுமன்ற உறுப்பினாின் பதவி பறிபோக வேண்டுமானால் சில நிபந்தனைகள் உள்ளன:
ஒரு கிரிமினல் வழக்கில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் அல்லது அதற்கு மேற்பட்ட சிறைத் தண்டனை விதிக்கப்பட்டால் மட்டுமே ஒரு நாடாளுமன்ற உறுப்பினா் தனது பதவியை உடனடியாக இழப்பார்.
இது ஒரு அவதூறு வழக்கு என்பதால், இதில் 2 ஆண்டுகள் அதிகபட்ச தண்டனை வழங்கப்பட வாய்ப்பு இருந்தாலும், மேல்முறையீடு மற்றும் தண்டனைக்குத் தடை (Stay) பெறுவதற்குச் சட்டத்தில் இடமுண்டு.
தற்போது இந்த வழக்கில் விசாரணை மட்டுமே நடைபெற்று வருகிறது. இன்னும் தீர்ப்பு வழங்கப்படவில்லை. எனவே, இப்போதைக்கு அவரது பதவி பறிபோகும் அபாயம் இல்லை.
2018 ஆம் ஆண்டு கர்நாடக தேர்தல் பிரச்சாரத்தின் போது, அப்போதைய பாஜக தலைவராக இருந்த அமித் ஷா குறித்து ராகுல் காந்தி சர்ச்சைக்குரிய கருத்துக்களைத் தெரிவித்தார்.
இது அமித் ஷாவின் நற்பெயருக்குக் களங்கம் விளைவிப்பதாகக் கூறி, பாஜக நிர்வாகி விஜய் மிஸ்ரா இந்த வழக்கைத் தொடர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது

