காவல்துறையினா் சித்திரவதை மற்றும் போலி வழக்கு: மனைவியின் குற்றச்சாட்டு
பருத்தித்துறை காவல்துறையினா் தனது கணவனை சட்டவிரோதமாக தடுத்து வைத்து சித்திரவதை செய்ததோடு, களவுக் குற்றச்சாட்டை மறைத்து போதைப்பொருள் வழக்கில் சிக்க வைத்துள்ளதாகப் பெண் ஒருவர் சுமத்தியுள்ள குற்றச்சாட்டு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பாதிக்கப்பட்டவரின் மனைவி இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவில் (HRCSL) இது குறித்து இன்று (வியாழக்கிழமை) முறைப்பாடு செய்துள்ளார்.
கடந்த 14ஆம் திகதி களவுச் சம்பவம் ஒன்று தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் எனக் கூறி, இவரது கணவர் உட்பட மூவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.
ஏனைய இருவர் பற்றிய விபரங்கள் வழங்கப்பட்ட போதிலும், இவரது கணவர் பற்றி 3 நாட்களாக காவல்துறையினா் எந்தத் தகவலும் வழங்கவில்லை.
17ஆம் திகதி பருத்தித்துறை காவல் நிலையத்தில் தனது கணவரைக் கண்டபோது, அவர் கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி, உடலில் இரத்தத் தழும்புகளுடன் நடக்க முடியாத நிலையில் இருந்ததாக மனைவி குறிப்பிட்டுள்ளார்.
ஆரம்பத்தில் ‘களவு’ என்று கூறிய காவல்துறையினா் மனைவியின் தொடர் கேள்விகளால் ஆத்திரமடைந்து, கணவரிடம் ‘ஐஸ்’ (Ice) போதைப்பொருள் இருந்ததாகக் கூறி வழக்கை மாற்றியுள்ளனர்.
“வேறு எதுவும் பேச வேண்டுமென்றால் நீதிமன்றத்தில் பேசு” எனக் கூறி காவல்துறையினா் அவரை வெளியேற்றியுள்ளனர். தற்போது அவரது கணவர் நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
இந்த அநீதிக்கு எதிராகவே அவர் யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவில் நீதிகோரி முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டைப் பெற்றுக்கொண்ட மனித உரிமை ஆணைக்குழு யாழ். பிராந்திய அலுவலகம் காவல்
நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலத்தில் பெண்ணின் கணவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறித்து சிறைச்சாலை வைத்திய அதிகாரியிடம் (JMO) மருத்துவ அறிக்கை கோரும் என எதிா்பாா்க்கப்படுகின்றது
பருத்தித்துறை காவல் நிலையப் பொறுப்பதிகாரியிடம் (OIC) குறித்த நபரை 14ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை தடுத்து வைத்தமைக்கான சட்டபூர்வ ஆவணங்கள் மற்றும் ‘ஐஸ்’ போதைப்பொருள் மீட்கப்பட்ட விதம் குறித்த விளக்க அறிக்கை கோரப்படும்.
மேலும் சிறைச்சாலைக்குச் சென்று பாதிக்கப்பட்ட நபரிடம் மனித உரிமை அதிகாரிகள் நேரடியாக வாக்குமூலம் பெறுவார்கள்.

