தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்  

தலைமன்னார் -நெடுந்தீவு கடற்பரப்பில் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் விளக்கமறியலில்

இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட நிலையில் கடற்படையினரால் கைது செய்யப்பட்ட 10 தமிழக மீனவர்களையும் எதிர்வரும் 05 ஆம் திகதி (05-03-2026) வரை விளக்கமறியலில் வைக்க மன்னார் நீதிமன்றம் இன்று வியாழக்கிழமை (19) உத்தரவிட்டுள்ளது.

 

தமிழகத்தை சேர்ந்த 10 மீனவர்கள் இரு படகில் மீன் பிடிக்க சென்ற நிலையில் இலங்கை கடற்பரப்பில் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்டனர்.

 

இதன் போது கடல் ரோந்து பணியில் ஈடுபட்ட கடற்படையினர் குறித்த 10 தமிழக மீனவர்களை கைது செய்ததோடு,அவர்கள் பயணித்த 02 படகையும் கைப்பற்றி தலைமன்னார் கடற் படையினரிடம் ஒப்படைத்தனர்.

 

தலைமன்னார் கடற்படையினர் குறித்த மீனவர்களிடம் விசாரணைகளை முன்னெடுத்த நிலையில்,இன்று(19) வியாழன் மதியம் மன்னார் கடற்றொழில் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

 

கடற்தொழில் திணைக்கள அதிகாரிகள் விசாரணைகளின் பின்னர் குறித்த மீனவர்களை மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்தினர்.

 

விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் குறித்த 10 மீனவர்களையும் எதிர்வரும் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

 

இதேவேளை நெடுந்தீவு கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 இந்திய கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.

 

நெடுந்தீவு கடற்பரப்பினுள் இரண்டு படகுகளுடன் 12 இந்திய கடற்தொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட வேளை கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

 

கைது செய்யப்பட்ட 12 கடற்தொழிலாளர்களையும் அவர்களின் படகினையும் மயிலிட்டி மீன்பிடித்துறை முகத்திற்கு கொண்டு வந்த கடற்படையினர் மேலதிக சட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலாளர்களை கடற்தொழில் நீரியல் வளத்துறை அதிகாரிகள் ஊடாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் முற்படுத்தினர்.

அதனை அடுத்து 12 கடற்தொழிலாளர்களையும் எதிர்வரும் 4ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது.

Recommended For You

About the Author: admin