கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள்

கச்சதீவு அந்தோனியார் திருவிழா 2026: முழுமையான விபரங்கள்

வரலாற்றுச் சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த பெருவிழா எதிர்வரும் பெப்ரவரி 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இதற்கான ஏற்பாடுகளை இலங்கை கடற்படை மற்றும் மாவட்ட செயலகம் இணைந்து தீவிரமாக முன்னெடுத்து வருகின்றன

இம்முறை இரு நாடுகளையும் சேர்ந்த சுமார் 8,000 யாத்திரிகர்கள் (இலங்கையிலிருந்து 4,000 மற்றும் இந்தியாவிலிருந்து 4,000) கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

யாத்திரிகர்களின் வசதிக்காக விசேட படகு மற்றும் பேருந்து சேவைகள் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளன.
படகுச் சேவை (ஒரு வழி கட்டணம்) குறிகட்டுவானிலிருந்து கச்சதீவுக்கு ரூபா 1,200 ஆகும் 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளன.
அதேபோன்று நெடுந்தீவிலிருந்து கச்சதீவுக்கு ரூபா 1,000 ஆகும்

மேலும் 27 ஆம் திகதி அதிகாலை 4:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை யாழ்ப்பாணம் பேருந்து நிலையத்திலிருந்து குறிகட்டுவான் வரை இலங்கை போக்குவரத்துச் சபை (SLTB) மற்றும் தனியார் பேருந்துகள் சேவையில் ஈடுபடும்.

யாத்திரிகர்களின் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு விசேட மருத்துவ வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கடற்படையினரால் கச்சதீவில் ஒரு அம்புலன்ஸ் படகு (Ambulance Boat) தயார் நிலையில் வைக்கப்படும்.

பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் வழிகாட்டலில் குறிகட்டுவான் பகுதியில் 02 அம்புலன்ஸ் வண்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும்.

குடிநீர், தற்காலிக தங்குமிடங்கள் மற்றும் ஏனைய அடிப்படை வசதிகளைக் கடற்படையினர் தற்போது தயார் செய்து வருகின்றனர்.

கச்சதீவு ஒரு பாதுகாக்கப்பட்ட பிரதேசம் என்பதால், அங்கு செல்லும் ஒவ்வொரு யாத்திரிகரும் முறையான அடையாளப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவார்கள்.

இலங்கையிலிருந்து செல்பவர்கள் தமது தேசிய அடையாள அட்டையை (NIC) கட்டாயமாக வைத்திருக்க வேண்டும். படகு ஏறும் இடத்திலும் (குறிகட்டுவான்), கச்சதீவிலும் கடற்படையினரால் இது சரிபார்க்கப்படும்.

யாத்திரிகர்கள் தமது பிரதேச செயலகம் அல்லது பங்குத்தந்தை ஊடாக முன்கூட்டியே பதிவு செய்திருப்பது அவசியமாகும்.

அதேபோன்று இந்தியாவிலிருந்து வரும் யாத்திரிகர்களுக்கு இரு நாட்டு அரசாங்கங்களுக்கிடையிலான ஒப்பந்தத்தின்படி சில விசேட சலுகைகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ளன:

இந்திய யாத்திரிகர்கள் கச்சதீவு வருவதற்கு இந்திய கடவுச்சீட்டோ அல்லது இலங்கைக்கான விசா (Visa) நடைமுறைகளோ தேவையில்லை. ஆதார் அட்டை (Aadhaar Card): அசல் மற்றும் அதன் நிழற்படப் பிரதிகள்,
உள்ளூர் காவல்துறையிடமிருந்து பெறப்பட்ட தடையின்மைச் சான்றிதழ், 3 கடவுச்சீட்டு அளவு புகைப்படங்கள் என்பனவே தேவையாகும்

பொதுவாக 5 முதல் 70 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே படகுப் பயணத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

ராமேஸ்வரத்தில் உள்ள வேர்கோடு புனித அந்தோனியார் ஆலயத்தில் இதற்கான விண்ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டு, மாவட்ட நிர்வாகத்தின் ஊடாக அனுமதி வழங்கப்படும்.

இலங்கைத் தமிழ் அகதி முகாம்களில் வசிக்கும் இந்தியாவிலுள்ளவர்கள் இத்திருவிழாவில் கலந்து கொள்ள அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin