யாழ் மானிப்பாய் வர்த்தகர் – மன்னாரை சேர்ந்த இருவர் உட்பட மூவர் கைது! தாய்லாந்தில் இருந்து கடத்தி வரப்பட்ட 2 கோடி ரூபாய் போதைப்பொருள் மீட்பு:
தாய்லாந்திலிருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட சுமார் 2 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய ‘குஷ்’ (Kush) ரக போதைப்பொருளுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வர்த்தகர் உட்பட மூவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
📍இன்று அதிகாலை 12.35 மணியளவில் தாய்லாந்தின் பேங்கொக் நகரிலிருந்து வருகை தந்த யாழ்ப்பாணம், மானிப்பாய் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய வர்த்தகர் ஒருவரை விமான நிலைய பாதுகாப்பு அதிகாரிகள் சோதனையிட்டனர். அவரது பயணப் பொதியை (Luggage) மிக நுணுக்கமாகப் பரிசோதித்த போது, அதில் உள்ள ரகசிய அறைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2 கிலோ 116 கிராம் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டது.
🕵️ கைது செய்யப்பட்ட வர்த்தகரிடம் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் நடத்திய அதிரடி விசாரணையில், இந்த போதைப்பொருள் தொகுதியை மன்னார் பகுதிக்குக் கொண்டு செல்வதற்காக இருவர் காத்திருப்பது அம்பலமானது.
இதனைத் தொடர்ந்து, நீர்கொழும்பு நகரிலுள்ள சொகுசு விற்பனை நிலையத்திற்கு அருகில் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பில், அங்கு காத்திருந்த மன்னார் பகுதியைச் சேர்ந்த 43 மற்றும் 36 வயதுடைய இருவர் கைது செய்யப்பட்டனர்.
🔍 கைது செய்யப்பட்டவர்கள்:
யாழ்ப்பாண வர்த்தகர் (26), மன்னாரைச் சேர்ந்த இருவர் (43, 36). கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர் தொழில்நுட்பவியலாளராக (Technician) பணியாற்றி வருபவர். காவற்துறை போதைப்பொருள் தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இலங்கைக்குள் போதைப்பொருள் ஊடுருவலைத் தடுக்க காவற்துறையினர் மற்றும் சுங்கப் பிரிவினர் சோதனைகளைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

