நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் கோட்டாபய: யாழ்ப்பாணத்தில் நீதிகோரிப் போராட்டம்!

நீதிமன்றத்தைப் புறக்கணிக்கும் கோட்டாபய: யாழ்ப்பாணத்தில் நீதிகோரிப் போராட்டம்!

யாழ்ப்பாண நீதிமன்றில் நடைபெற்று வரும் லலித் – குகன் காணாமலாக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச தொடர்ச்சியாக முன்னிலையாவதைத் தவிர்த்து வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து யாழில் கவனயீர்ப்புப் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

 

📌 வலிந்து காணாமலாக்கப்பட்ட லலித்குமார் வீரராஜ் மற்றும் குகன் முருகானந்தன் தொடர்பான விசாரணை.பாதுகாப்பு அச்சுறுத்தல் இருப்பதாகக் கூறி நேரில் முன்னிலையாவதைத் தவிர்த்து, இணையவழியில் சாட்சியமளிக்க அனுமதி கோரியுள்ளார். ஜனாதிபதித் தேர்தல் காலங்களிலும், அதன் பின்னரும் பலமுறை யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்த கோட்டாபய, தற்போது நீதிமன்றத்திற்கு வருவதற்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் எனக் கூறுவது ஏற்கத்தக்கதல்ல என வழக்குத் தொடுநர் தரப்பு வாதிட்டுள்ளது.

 

🗓️ இன்று வெள்ளிக்கிழமை இவ்வழக்கு விசாரணைக்கு வந்தபோது கோட்டாபய முன்னிலையாகவில்லை. இதனையடுத்து, இருதரப்பு சட்டத்தரணிகளையும் எழுத்துமூல சமர்ப்பணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்ட மன்று, வழக்கினை மார்ச் மாதம் 06ஆம் திகதிக்கு ஒத்திவைத்தது.

 

🪧 போராட்டக் களத்தில் எழுந்த குரல்கள்:

நீதிமன்ற புறக்கணிப்புக்கு எதிராகவும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டியும் போராட்டக்காரர்கள் பின்வரும் கோரிக்கைகளை முன்வைத்தனர்:

 

• “செம்மணியை மீண்டும் புதைக்க இடமளியோம்!”

• “அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்!”

• “பயங்கரவாத தடைச்சட்டத்தை (PTA) நீக்கு!”

• “சமவுரிமையை உறுதிப்படுத்தும் புதிய அரசியலமைப்பை வென்றெடுப்போம்!”

நீதிமன்றக் கட்டளைகளைத் தொடர்ச்சியாகப் புறக்கணிப்பது நீதியைத் தாமதப்படுத்தும் செயல் எனப் போராட்டத்தின் போது சுட்டிக்காட்டப்பட்டது.

Recommended For You

About the Author: admin