பாலஸ்தீன ஆதரவு ஸ்டிக்கர் ஒட்டிய பிரித்தானிய தம்பதி – இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்திரவு!
ராஜஸ்தானின் புஷ்கர் (அஜ்மீர் மாவட்டம்) பகுதியில் பாலஸ்தீன ஆதரவு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்பு ஸ்டிக்கர்களை ஒட்டியதற்காக பிரித்தானிய தம்பதியினரை இந்தியாவை விட்டு வெளியேறுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.
சுற்றுலா விசாவில் இந்தியா சென்றிருந்த இந்தத் தம்பதியினர், புஷ்கர் நகரின் பல்வேறு பொது இடங்களில் இஸ்ரேல்-பாலஸ்தீன மோதல் தொடர்பான ஸ்டிக்கர்களை ஒட்டியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
லூயிஸ் கேப்ரியல் டீ (Lewis Gabriel Dee – 36) மற்றும் அனிஷி எம்மா கிறிஸ்டின் (Anueshi Emma Christine – 36)ஆகிய இவர்கள் புஷ்கர் நகரின் சுவர்கள் மற்றும் பொது இடங்களில் “Free Palestine” மற்றும் “Boycott Israel” போன்ற வாசகங்கள் அடங்கிய 9 வகையான ஸ்டிக்கர்களை ஒட்டியுள்ளனர்.
இந்திய சுற்றுலா விசா விதிகளின்படி, வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் எந்தவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் (Political Activities) ஈடுபடக்கூடாது. இந்த விதியை அவர்கள் மீறியதாக ராஜஸ்தான் மாநில குற்றப் புலனாய்வுத் துறை (CID) தெரிவித்தது.
ஜனவரி 21-ஆம் திகதி முதல் இந்த ஸ்டிக்கர்கள் காணப்பட்ட நிலையில், விசாரணையைத் தொடங்கிய CID அதிகாரிகள் அஜ்மீர் மண்டல பதிவு அலுவலகம் (FRO) மூலம் இந்தத் தம்பதியினரைக் கண்டுபிடித்தனர்.
2025-ஆம் ஆண்டின் குடியேற்றம் மற்றும் வெளிநாட்டவர் சட்டத்தின் (Immigration and Foreigners Act, 2025) கீழ், அவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என ‘Leave India’ உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.
இதற்காக தம்பதியினா் மன்னிப்பு கோரியதுடன், விரைவில் நாடு திரும்புவதற்கான விமான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து வருவதாக அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
புஷ்கர் நகரம் இஸ்ரேலிய சுற்றுலாப் பயணிகளிடையே மிகவும் பிரபலம் என்பதால், அங்கு ஒரு ‘சபாத் ஹவுஸ்’ (Chabad House – யூதர்களின் வழிபாட்டு தலம்) உள்ளது. இவ்வாறான இடங்களில் இதுபோன்ற ஸ்டிக்கர்களை ஒட்டுவது உள்ளூர் உணர்வுகளைப் பாதிக்கும் என காவல்துறை எச்சரித்துள்ளது.

