சீனா அதிரடி : மியன்மர் மாஃபியா கும்பலின் மேலும் 4 பேருக்கு மரண தண்டனை!

சீனா அதிரடி : மியன்மர் மாஃபியா கும்பலின் மேலும் 4 பேருக்கு மரண தண்டனை!

மியன்மரைத் தளமாகக் கொண்டு இயங்கி வந்த பாரிய குற்றவியல் கும்பலின் (Mafia) மேலும் நான்கு முக்கிய உறுப்பினர்களுக்குச் சீனா இன்று (பெப்ரவரி 2, 2026) மரண தண்டனையை நிறைவேற்றியுள்ளது.

சீனாவின் ஷென்சென் (Shenzhen) நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பின் அடிப்படையில், உயர் நீதிமன்றத்தின் ஒப்புதலுக்குப் பிறகு இந்தத் தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்தக் குற்றவியல் கும்பல் மியன்மரின் வடக்கு எல்லைப் பகுதியில் ‘தொலைத்தொடர்பு மோசடி’ (Telecom Fraud) மையங்களை நடத்தி, சீன மக்களிடமிருந்து சுமார் $4.2 பில்லியன் (29 பில்லியன் யுவான்) பணத்தைச் சூறையாடியுள்ளனர்.

இக்கும்பலின் நடவடிக்கைகளால் 6 சீனப் பிரஜைகள் கொல்லப்பட்டதோடு, பலர் படுகாயமடைந்துள்ளனர்.

இவா்கள் சட்டவிரோத சூதாட்டம், போதைப்பொருள் கடத்தல், ஆள் கடத்தல் மற்றும் கட்டாய விபச்சாரம் போன்ற கொடூரமான குற்றங்களில் இவர்கள் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டுள்ளது

இன்று தூக்கிலிடப்பட்டவர்கள் மியான்மரின் கொக்காங் (Kokang) பிராந்தியத்தில் செல்வாக்கு செலுத்திய பிரபல ‘பாய்’ (Bai) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். இந்தக் கும்பலின் தலைவரான ‘பாய் சுவோசெங்’ (Bai Suocheng) சிறையிலேயே நோய்வாய்ப்பட்டு உயிரிழந்த நிலையில், எஞ்சிய முக்கிய நான்கு தலைவர்களுக்கு இன்று தண்டனை நிறைவேற்றப்பட்டது.

கடந்த வாரம் (ஜனவரி 29) மியான்மரின் மற்றொரு பிரபல மாஃபியா கும்பலான ‘மிங்’ (Ming) குடும்பத்தைச் சேர்ந்த 11 பேருக்குச் சீனா மரண தண்டனை நிறைவேற்றியிருந்தது. தென்கிழக்கு ஆசியாவில் அதிகரித்து வரும் இணையவழி மோசடி மையங்களை (Scam Centers) முற்றாக ஒழிக்கச் சீனா எடுத்து வரும் தீவிர நடவடிக்கையின் ஒரு பகுதியாக இது பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin