யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்..!

யாழில்.சிறுமியின் கை துண்டிக்கப்பட்ட சம்பவம் – மருத்துவர்களை கைது செய்ய பின்னடிக்கும் பொலிஸார்..!

யாழ் . போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கு மருத்துவ தவறால் கை மணிக்கட்டுடன் அகற்றப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் விசாரணைகள் தொடர்பில் நீதிமன்றம் கடுமையான அதிருப்தியை வெளியிட்டுள்ளது.

பொலிசரின் இத்தகைய செயற்பாடு தொடருமாயின் வழக்கினை குற்ற புலனாய்வு துறையினருக்கு பரப்படுத்த நேரும் எனவும் பொலிஸாருக்கு மன்று அறிவுத்தியுள்ளது.

 

கடந்த 2023ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் சிறுமி ஒருவர் காய்ச்சல் மற்றும் தோலில் ஏற்பட்ட தொற்றுக் காரணமாக யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

 

அவருக்கு மணிக்கட்டில் ஊசி (கணூலா )மூலம் மருந்து செலுத்தப்பட்டது. ஓரிரு நாள்களில் கை மணிக்கட்டு வீக்கமடைந்த நிலையில், கையின் செயற்பாடு மணிக்கட்டுடன் செயலற்று போனதாக கூறி, அந்தப் பகுதி வெட்டி அகற்றப்பட்டது.

 

இந்த விடயத்தில் மருத்துவத் தவறு நேர்ந்துள்ளதாக சிறுமியின் பெற்றோர் குற்றஞ்சாட்டியதுடன், பல்வேறு தரப்பினரிடம் தமக்கான நீதியையும் கோரியிருந்தனர்.

 

அது தொடர்பில் யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டு , வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகிறது.

 

அந்நிலையில் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்ட போது, கடந்த தவணையின் போது மூன்று மருத்துவர்களை சந்தேகநபர்களாகப் பெயரிடப் போவதாக பொலிஸார் தெரிவித்திருந்தனர் .

 

ஆனால் அவர்களைச் சந்தேகநபர்களாகப் பெயரிட வேண்டிய அவசியம் இல்லை என வழக்கு விசாரணையில் பொலிஸார் தெரிவித்தனர்.

 

இதையடுத்தே, கடந்த இரண்டரை வருடங்களுக்கும் மேலாக நீடித்துவரும் இந்த வழக்கை பொலிஸார் கையாளும் விதம் தொடர்பில் நீதவான் தனது கடுமையான அதிருப்தியைத் தெரிவித்தார்.

 

மருத்துவர்களைக் கைது செய்யாத பொலிஸார் , தாதியர்களைக் கைது செய்து சந்தேகநபர்களாக முற்படுத்தி உள்ளனர். ஒரே வழக்கில், இருவேறு நிலைப்பாட்டுடன் பொலிஸார் செயற்படுகின்றனர்.

 

அத்துடன், இந்த வழக்கில் பொலிஸார் திட்டமிட்ட வகையிலும், அல்லது முறையற்ற விசாரணைகள் காரணமாகவும் நீண்ட தாமதங்களை ஏற்படுத்துகின்றனர். பொலிஸாரின் செயற்பாட்டில் இந்த நீதிமன்றம் திருப்தியடையவில்லை.

 

தமக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமையவே தாம் சிறுமிக்கு மருந்து ஏற்றினோம் என்று பொலிஸாரின் விசாரணையிலும், திறந்த நீதிமன்றத்திலும் தாதியர்கள் வாக்குமூலம் வழங்கியுள்ளனர்.

 

அத்துடன், சிறுமிக்கான சிகிச்சைக் குறிப்பில் மருந்தைச் செலுத்த வேண்டிய அளவீடுகள் குறிக்கப்படவில்லை என்றே நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்ட ஆவணங்கள் காண்பிக்கின்றன. ஆதலால், பொலிஸாரின் முன்பின் முரணான செயற்பாடுகளை ஏற்றுக்கொள்ள முடியாது.

 

மருத்துவர்களைக் கைது செய்வதற்கு அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் அனுமதி பெறவேண்டியுள்ளது என்றுவிட்டு, தற்போது அவர்களைச் சந்தேகநபர்களாகப் பெயரிட வேண்டிய தேவை இல்லை என்கின்றனர்.

 

நீதி கிடைக்கும் என்று நம்பியே மக்கள் நீதிமன்றத்துக்கு வருகின்றனர். ஆனால், பொலிஸாரின் செயற்பாடு மக்களுக்கு அநீதியை வெளிப்படுத்துகின்றது.

 

எனவே, வடமாகாண பிரதிப்பொலிஸ் மா அதிபரின் தலைமையில் இந்த விடயத்தில் முறையான விசாரணைகள் இடம்பெற வேண்டும்.

 

இந்த வழக்குத் தொடர்பான குறிப்புகள் பொலிஸ்மா அதிபரின் விசேட அவதானத்துக்காக அனுப்பப்பட வேண்டும். தேவையேற்படின் இந்த வழக்கை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்துக்கு பாரப்படுத்த வேண்டிய நிலை ஏற்படலாம்’ என நீதவான் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: admin