நெஞ்சை உலுக்கிய மிருசுவில் படுகொலை..!.

நெஞ்சை உலுக்கிய மிருசுவில் படுகொலை..!.

காலம் 2000. யாழ்ப்பாணம் மிருசுவில் கிராமம். யுத்தம் காரணமாக மக்கள் தங்கள் சொந்த வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கியிருந்த காலம் அது. பல மாதங்களுக்குப் பிறகு ஒரு தற்காலிக அனுமதி கிடைத்தது. “யாரும் தங்களின் வீடுகளைப் போய்ப் பார்க்கலாம்; துப்புரவு செய்யலாம்” என்று சொன்னதும் அந்த மக்களுக்கு வந்த சந்தோஷத்திற்கு அளவே இல்லை. தங்கள் சொந்த மண்ணை மிதிக்கப் போகிறோம் என்ற ஆவலில் அவர்கள் துடித்தார்கள்.

 

டிசம்பர் மாதம் 19ஆம் திகதி. கதிர்காமத்தம்பி உட்பட எட்டுப் பேர் கொண்ட ஒரு குழு மிருசுவில் நோக்கிப் புறப்பட்டது. அதில் ஐந்து வயதுச் சிறுவன் வில்வராஜாவும் இருந்தான். அவனுக்குத் தன் வீட்டைப் பார்க்க வேண்டும் என்ற ஆசையை விட வீட்டு முற்றத்தில் விட்டு வந்த சைக்கிளை எடுக்க வேண்டும் என்ற ஆசைதான் அதிகம். அந்த எட்டுப் பேரும் மகிழ்ச்சியாகப் பேசிக்கொண்டே அந்தச் செம்மண் பாதையில் நடந்தார்கள். அதுதான் அவர்களின் கடைசிப் பயணம் என்று அப்போது யாருக்கும் தெரிந்திருக்கவில்லை.

 

ஊருக்குள் நுழைந்தார்கள். பாழடைந்த வீடுகள். இடிந்து போன சுவர்கள். பற்றை மண்டிக் கிடந்த வளவுகள். ஆனாலும் அது அவர்கள் பூமி. அவர்கள் சந்தோஷமாகத் தங்கள் வீடுகளைச் சுத்தம் செய்தார்கள். சிறுவன் வில்வராஜா தன் பழைய சைக்கிளைத் தேடி எடுத்துக்கொண்டு முற்றத்தில் ஓடினான். மதிய நேரம் வந்தது. “சரி, வேலை முடிந்தது. திரும்பிப் போவோம்” என்று அவர்கள் கிளம்பினார்கள்.

 

ஆனால் விதி வழிமறித்தது.

 

அங்கே நின்ற ஆயுதமேந்திய ஒரு கும்பல் அவர்களைச் சுற்றி வளைத்தது. எந்தக் காரணமும் சொல்லப்படவில்லை. எந்த விசாரணையும் இல்லை. அந்த எட்டுப் பேரும் ஆடு மாடுகளைப் போல இழுத்துச் செல்லப்பட்டார்கள். சிறுவன் வில்வராஜா “அப்பா, வீட்டை போவமப்பா” என்று அழுதுகொண்டே தன் அப்பாவின் சேர்ட்டைப் பிடித்துத் தொங்கினான். அந்தக் கல் நெஞ்சக்காரர்களுக்கு அந்தப் பிஞ்சுக்குரல் கேட்கவில்லை.

 

அவர்களை ஒரு பாழடைந்த வீட்டுக்குப் பின்புறம் கொண்டு சென்றார்கள். வரிசையாக நிறுத்தப்பட்டார்கள். கண்களைக் கட்டினார்கள். அந்த இடத்தில் மரண ஓலம் கேட்டது. ஒவ்வொருவராகத் தாக்கப்பட்டார்கள். கழுத்து அறுக்கப்பட்டது. ரத்தம் அந்த மிருசுவில் மண்ணை நனைத்தது.

கூட்டத்தில் இருந்த மகேஸ்வரன் என்ற ஒருவருக்குக் கழுத்தில் வெட்டு விழுந்தது. ஆனால் அது ஆழமாக விழவில்லை. அவர் செத்துவிட்டதாக நினைத்து அந்தக் கும்பல் அவரைத் தள்ளிவிட்டது. அவர் மூச்சடக்கிப் பிணமாக நடித்தார். மற்றவர்கள் எல்லோரும் கொல்லப்பட்ட பிறகு அந்தக் கும்பல் சிகரெட் பிடிக்கச் சென்ற இடைவெளியில் மகேஸ்வரன் வேலியால் பாய்ந்து ஓடினார். முள்ளுக்கம்பி கிழித்தது. ரத்தம் வழிந்தது. ஆனாலும் உயிர் பிழைக்க வேண்டும் என்ற வெறியில் அவர் ஓடினார். பல மைல் தூரம் ஓடி மக்கள் இருந்த பகுதியை அடைந்து மயங்கி விழுந்தார்.

 

அவர் சொன்னதைக் கேட்டு ஊரே திரண்டது. நீதிபதி வந்தார். அதிகாரிகள் வந்தார்கள். மகேஸ்வரன் அந்த இடத்தைக் காட்டினார். ஆனால் அங்கே யாரையும் காணவில்லை. உடல்கள் எங்கே.

 

கடைசியாக அந்தப் பாழடைந்த வீட்டின் கழிவுநீர்த் தொட்டி மீது இருந்த சிமெண்ட் மூடி ஈரமாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அதிகாரிகள் அந்த மூடியைத் திறந்தார்கள்.

 

அங்கே கண்ட காட்சி, பார்த்தவர்களின் கண்களை குருடாக்கியது.

 

அந்தச் சிறிய குழிக்குள் ஒன்றின் மேல் ஒன்றாக எட்டு உடல்களும் திணிக்கப்பட்டிருந்தன. எல்லோருக்கும் அடியில் அந்த ஐந்து வயதுச் சிறுவன் வில்வராஜாவின் உடல் கிடந்தது. அவனது பிஞ்சுக்கழுத்து நெரிக்கப்பட்டிருந்தது. அவன் கையில், தான் ஆசையாக எடுத்து வந்த அந்தப் பழைய சைக்கிளின் Bell ஒன்று இறுக்கமாகப் பற்றிக்கொள்ளப்பட்டிருந்தது. கடைசி நிமிடம் வரை அவன் தன் அப்பாவைக் காப்பாற்றப் போராடியதற்கான அடையாளங்கள் அவன் நகக்கண்களில் இருந்தன.

 

அன்று மிருசுவில் கிராமமே அழுதது. போர் எத்தனையோ உயிர்களை எடுத்திருக்கலாம். ஆனால் ஒரு பிஞ்சுப் பாலகனை, ஆசையாகத் தன் வீட்டைப் பார்க்க வந்தவனை, இப்படி ஒரு கழிவுநீர்க் குழிக்குள் தள்ளிக் கொன்றதை எந்தத் தெய்வத்தாலும் மன்னிக்க முடியாது. இந்தக் கதையை எழுதும் போது அந்தச் சிறுவனின் சைக்கிள் மணி சத்தமும், அவன் அலறல் சத்தமும் என் காதில் கேட்கிறது.

இந்தச் சம்பவம் குறித்த வழக்கு பல வருடங்களாக நடந்து இறுதியில் ஒரு இராணுவ அதிகாரிக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு பின்னர் கோத்தாபாய ராஜபக்சவால் பொது மன்னிப்பில் விடுவிக்கப்பட்டார்.

Recommended For You

About the Author: admin