2026 டி20 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிரான போட்டியைப் பாகிஸ்தான் புறக்கணிக்க எடுத்துள்ள முடிவு, அந்நாட்டு கிரிக்கெட்டிற்கு நீண்டகால ரீதியில் மிக மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தும் என சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) எச்சரித்துள்ளது.
வங்கதேச அணியை உலகக் கோப்பையிலிருந்து நீக்கிய ஐசிசி-யின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி கொழும்பில் நடைபெறவிருந்த இந்தியா – பாகிஸ்தான் போட்டியில் மட்டும் விளையாடப் போவதில்லை எனப் பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் இந்த ‘தேர்ந்தெடுக்கப்பட்ட பங்கேற்பு’ (Selective Participation) என்ற கொள்கையை ஏற்றுக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ள ஐசிசி, இது உலகளாவிய விளையாட்டு ஒப்பந்தங்களை மீறும் செயல் என்று சுட்டிக்காட்டியுள்ளது.
இந்த முடிவினால் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் (PCB) கடுமையான பொருளாதாரத் தடைகளையும் சட்ட ரீதியான சிக்கல்களையும் எதிர்கொள்ள நேரிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பாக, ஐசிசி-யிடமிருந்து பாகிஸ்தானுக்குக் கிடைக்க வேண்டிய வருடாந்திர நிதிப் பங்கான சுமார் 34.5 மில்லியன் டாலர்கள் நிறுத்தப்படலாம் என்றும், பாகிஸ்தான் சூப்பர் லீக் (PSL) தொடரில் வெளிநாட்டு வீரர்கள் விளையாடுவதற்கான தடையில்லாச் சான்றிதழ்கள் (NOC) மறுக்கப்படலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மேலும், இருதரப்பு கிரிக்கெட் தொடர்கள் ரத்து செய்யப்படுவதுடன், ஆசியக் கோப்பை போன்ற தொடர்களில் இருந்தும் பாகிஸ்தான் நீக்கப்பட வாய்ப்புள்ளது.
மைதானத்தில் மோத வேண்டிய ‘கிரிக்கெட் போர்’ இப்போது நிர்வாக ரீதியான போராக மாறியுள்ளது. இந்தப் போட்டியின் ஒளிபரப்பு உரிமம் மூலம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டத் திட்டமிட்டிருந்த நிறுவனங்கள், பாகிஸ்தானின் முடிவால் தங்களுக்கு ஏற்படும் இழப்பிற்குப் பல மில்லியன் டாலர்கள் நஷ்டஈடு கோரி வழக்கு தொடரவும் வாய்ப்புள்ளது.

