“ரயில் தாமதம், தேர்வு தவறியது; மாணவிக்கு ரயில்வே 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்” – நுகர்வோர் ஆணையம்
இனியாவது ரயில்கள் நேரத்திற்கு ஓடத் தொடங்குமா???
ரயில் தாமதமானதால் தேர்வு எழுத முடியாமல் போன மாணவிக்கு, ரயில்வே 9.10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என்று மாவட்ட நுகர்வோர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவம் உத்தரப் பிரதேசத்தின் பஸ்தி மாவட்டத்தில் நடைபெற்றது.
காந்திநகர் பிகௌரா பக்ஸ் பகுதியைச் சேர்ந்த சம்ருத்தி சிங் என்பவரே ரயில்வேக்கு எதிராக புகார் அளித்துள்ளார்.
இந்த வழக்கிற்கு காரணமான சம்பவம் 2018 மே 7 அன்று நடந்தது. லக்னோவில் உள்ள ஜெய் நாராயண் பிஜி கல்லூரியில் நடைபெறவிருந்த நீட் தேர்வில் பங்கேற்பதற்காக, அவர் இன்டர் சிட்டி சூப்பர் ஃபாஸ்ட் ரயிலில் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தார். டிக்கெட் கட்டணம் 190 ரூபாய்.
தேர்வுக்கான ரிப்போர்டிங் நேரம் மதியம் 12:30 ஆக இருந்தது.
ஆனால் ரயில் சார்பாக் (Charbagh) நிலையத்தை நிர்ணயிக்கப்பட்ட நேரத்தில் அடையவில்லை.
ரயில் இரண்டு மணி நேரத்திற்கும் மேலாக (சுமார் 2.5 மணி நேரம்) தாமதமாக வந்ததால், மாணவிக்கு தேர்வு எழுதும் வாய்ப்பு கிடைக்கவில்லை.
இதனால் அந்த மாணவியின் ஒரு முழு கல்வி ஆண்டு இழந்தது. இதனைத் தொடர்ந்து இழப்பீடு கோரி ரயில்வேக்கு எதிராக அவர் வழக்கு தொடர்ந்தார்.
மாணவி 20 லட்சம் ரூபாய் இழப்பீடு கோரியிருந்தார்.
ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 45 நாட்களுக்குள் 9.10 லட்சம் ரூபாய் ரயில்வே வழங்க வேண்டும் என்று ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
குறிப்பிட்ட காலக்கெடுவில் தொகை வழங்கப்படாவிட்டால், 12 சதவீத வட்டியும் ரயில்வே செலுத்த வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

