அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு!

அணுசக்தி ரகசியங்களை கசியவிட்டதாக சீன ஜெனரல் மீது குற்றச்சாட்டு!

சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங்கின் மிக நெருக்கமான இராணுவ தளபதியாகக் கருதப்பட்ட ஜெனரல் ஜாங் யூஷியா (Zhang Youxia), தற்போது பெரும் சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் சீனாவின் அதீத ரகசியங்கள் அடங்கிய அணுசக்தி தகவல்களை அமெரிக்காவிற்கு கசியவிட்டதாக பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

சீனாவின் மத்திய இராணுவ ஆணையத்தின் (CMC) துணைத் தலைவரான ஜாங் யூஷியா, நாட்டின் மிக உயரிய அணு ஆயுதத் தொழில்நுட்ப ரகசியங்களை அமெரிக்காவிடம் பகிர்ந்துகொண்டதாக ‘வால் ஸ்ட்ரீட் ஜர்னல்’ (WSJ) செய்தி வெளியிட்டுள்ளது.

நாட்டின் பாதுகாப்பு ரகசியங்களை கசியவிட்டதோடு மட்டுமல்லாமல், இராணுவப் பதவிகளைப் பெற்றுத் தர பல கோடி ரூபாய் லஞ்சம் பெற்றதாகவும் அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

ஷி ஜின்பிங்கின் நீண்டகால நண்பராகவும் விசுவாசியாகவும் இருந்த ஜாங், தற்போது அனைத்துப் பொறுப்புகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டு விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளார்.

இராணுவத்தில் அதிரடி மாற்றம்: அண்மைக்காலமாக சீன இராணுவத்தின் ‘ரொக்கெட் ஃபோர்ஸ்’ (Rocket Force) பிரிவில் நடந்து வரும் தொடர் விசாரணைகளின் ஒரு பகுதியாகவே இந்த அதிரடி நடவடிக்கை பார்க்கப்படுகிறது.

“கட்சிக்கும் நாட்டுக்கும் செய்த துரோகம்” என சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஊடகங்கள் இந்த விவகாரத்தைக் கண்டித்துள்ளன. இது சர்வதேச அளவில் சீனா-அமெரிக்கா இடையிலான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தும் எனக் கருதப்படுகிறது.

Recommended For You

About the Author: admin