மன்னார் – புத்தளம் வீதியைத் திறக்கக் கோரி மாபெரும் கையெழுத்துப் போராட்டம்
மன்னாரில் இருந்து முசலி வழியாக புத்தளத்திற்கு செல்லும் பிரதான வீதியைத் திறக்கக் கோரி, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிற்கு அழுத்தம் கொடுக்கும் வகையில் இன்று பிரம்மாண்ட கையெழுத்துப் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இன்று (ஜனவரி 23, 2026) காலை மன்னார் அரச பேருந்து தரிப்பிடத்திற்கு முன்பாக இந்த மக்கள் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. முசலி பிரதேச செயலாளர் பிரிவின் இளவன்குளம் ஊடாக செல்லும் இந்த வீதியானது நீண்டகாலமாக மக்களின் பாவனைக்குத் தடையாக இருந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
சேகரிக்கப்படும் ஆயிரக்கணக்கான கையெழுத்துக்கள் ஒரு மகஜராகத் தொகுக்கப்பட்டு, ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவிடம் கையளிக்கப்படவுள்ளது.
இந்த வீதி திறக்கப்பட்டால், மன்னார் மாவட்ட மீனவர்கள் தமது கடல் உணவுப் பொருட்களைத் தென் பகுதிக்கு விரைவாகக் கொண்டு செல்ல முடியும். இது அப்பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை வெகுவாக உயர்த்தும்.
மன்னார் மட்டுமல்லாது வடபகுதி மக்கள் அனைவரும் தென் பகுதிக்குச் செல்வதற்கான தூரம் மற்றும் நேரம் கணிசமாகக் குறையும்.
இந்தக் கையெழுத்துப் போராட்டத்தில் மதத் தலைவர்கள், மீனவ சங்கப் பிரதிநிதிகள், பொது அமைப்புகள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பல தரப்பினரும் ஆர்வத்துடன் கலந்துகொண்டு தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.


