டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..!

டி-20 உலக கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் நிகழ்வு ஆரம்பம்..!

2026 ஆம் ஆண்டு இந்தியாவும் இலங்கையும் இணைந்து நடத்தும் ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டியின் கிண்ணத்தை நாட்டில் காட்சிப்படுத்தும் சுற்றுப்பயணம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு இன்று (21) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் நடைபெற்றது.

 

இன்று முதல் எதிர்வரும் 24 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு நாட்டின் பல பிரதான நகரங்களில் இது காட்சிப்படுத்தப்படுவதோடு, கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச மைதானத்தில் நடைபெறும் இலங்கை-இங்கிலாந்து ஒருநாள் போட்டியின் போது விளையாட்டு ரசிகர்கள் இந்த உலக கிண்ணத்தை அருகில் இருந்து பார்க்கும் வாய்ப்பைப் பெறுவார்கள்.

 

அதன் பின்னர், கிண்ணத்தை கண்டி, தம்புள்ளை மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய நகரங்களுக்கு எடுத்துச் செல்ல திட்டமிடப்பட்டுள்ளதுடன், அங்கு அந்தப் பகுதிகளில் வசிக்கும் விளையாட்டு ரசிகர்கள் உலகக் கிண்ணத்துடன் நினைவுப் படங்களை எடுக்கவும் அதைப் பார்க்கும் வாய்ப்பும் வழங்கப்படும்.

 

இந்த நாட்டில் உலகக் கிண்ண போட்டிகள் நடத்தப்படுவதற்கு முன்பு அதற்கான ஆர்வத்தையும் பார்வையாளர்களின் கவனத்தையும் ஈர்ப்பதே இந்த சுற்றுப்பயணத்தின் முக்கிய நோக்கமாகும்.

 

ICC இருபதுக்கு 20 உலகக்கிண்ண கிரிக்கெட் போட்டிகளை பெப்ரவரி 07 முதல் மார்ச் 08 வரை இலங்கை மற்றும் இந்தியா இணைந்து நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

 

2012 இருபதுக்கு 20 உலகக்கிண்ண போட்டிகளுக்குப் பிறகு இலங்கையில் நடத்தப்படும் மாபெரும் போட்டி, இந்த உலகக்கிண்ணப் போட்டியாகும்.

 

கிரிக்கெட் உலகக்கிண்ண போட்டிகளுக்கான அட்டவணை 2025 நவம்பர் 25 ஆம் திகதி இந்தியாவில் வெளியிடப்பட்டதுடன், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானம், பல்லேகலே சர்வதேச மைதானம் மற்றும் கொழும்பில் உள்ள எஸ்.எஸ்.சி. மைதானம் ஆகியவற்றை இலங்கையில் நடத்தப்படும் போட்டிகளுக்கான இடங்களாகத் தேர்ந்தெடுத்தது.

 

அதன்படி, 8 போட்டிகள் ஆர். பிரேமதாச மைதானத்திலும், 5 போட்டிகள் எஸ்.எஸ்.சி. மைதானத்திலும், 7 போட்டிகள் பல்லேகலே சர்வதேச மைதானத்திலும் நடைபெறவுள்ளது.

 

இம்முறை, 20 நாடுகள் போட்டியில் பங்கேற்க உள்ளதுடன், அதில் 20 போட்டிகள் இலங்கையில் நடைபெற உள்ளன. மேலும் பாகிஸ்தான் அணி போட்டியிடவுள்ள அனைத்துப் போட்டிகளும் இலங்கையில் நடைபெறும். அதேபோன்று, பாகிஸ்தான் அணிக்கு அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் பங்கேற்க வாய்ப்புக் கிடைத்தால், அந்த இரண்டு போட்டிகளும் இலங்கையில் நடத்தப்படும்.

 

அவ்வாறு நடந்தால், இறுதிப் போட்டி கொழும்பில் உள்ள ஆர். பிரேமதாச மைதானத்தில் நடைபெறுவதோடு, இதன் மூலம் இலங்கையில் நடைபெறும் மொத்த போட்டிகளின் எண்ணிக்கை 22 ஆக அதிகரிக்கும்.

 

இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் போட்டிகள் நடைபெறுவதோடு, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, நியூசிலாந்து, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஜிம்பாப்வே மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய டெஸ்ட் அந்தஸ்து பெற்ற நாடுகளின் கிரிக்கட் அணிகள் இதில் அடங்கும்.

 

மேலும், அமெரிக்கா, கனடா, இத்தாலி, நெதர்லாந்து, நெமீபியா, நேபாளம், ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியம் ஆகிய நாடுகளும் இந்த ஆண்டு போட்டிகளில் பங்கேற்க உள்ளன.

 

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இலங்கையில் நடைபெறும் இருபதுக்கு 20 உலகக்கிண்ணப் போட்டிகள், நாட்டின் பொருளாதாரம், சுற்றுலாத் துறை, விளையாட்டு மேம்பாடு, சர்வதேச விளம்பரம் மற்றும் நாடு தொடர்பில் சாதகமாக நன்மதிப்பை பெறுவதற்கான ஒரு சிறந்த வாய்ப்பாகக் கருதலாம்.

 

குறிப்பாக வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள், வெளிநாட்டு அணிகள், ஊடகக் குழுக்கள் மற்றும் ஆயிரக்கணக்கான பார்வையாளர்கள் இலங்கைக்கு வருகை தருவதன் மூலம் நாட்டிற்கு அதிக அளவு அந்நியச் செலாவணி வருமானம் கிடைக்கும். மேலும், இதன் ஊடாக ஹோட்டல்கள் மற்றும் உணவு வர்த்தகங்கள், போக்குவரத்து சேவைகள், தொழில்நுட்ப மற்றும் நிர்வாக சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் குறுகிய மற்றும் நீண்ட கால வேலை வாய்ப்புகள் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

 

இலங்கையில் இந்தப் போட்டிகளை நடத்துவதன் மூலம், இலங்கையை ஒரு சுற்றுலாத் தலமாக உலகம் இனங்காண்பதுடன், அதன் ஊடாக புதிய முதலீடுகளை அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் உருவாகும்.

 

மேலும், வருடத்தின் ஒவ்வொரு மாதமும் இலங்கையை ஒரு விளையாட்டு சுற்றுலா மையமாக அடையாளம் காணுதல் மற்றும் நாட்டின் சர்வதேச பின்னணியை வலுப்படுத்தி, அதன் மூலம் இலங்கையின் மதிப்பை அதிகரிப்பது போன்ற நீண்டகால நன்மைகளையும் இதன் மூலம் பெற்றுத்தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin