செம்மணி புதைகுழி: “நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

செம்மணி புதைகுழி: “நிலத்தோற்றத்தை மாற்றக்கூடாது” – நீதிமன்றம் அதிரடி உத்தரவு

யாழ்ப்பாணம் அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானப் பகுதியில் நடைபெற்று வரும் செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வுப் பணிகளின் போது, அந்த இடத்தின் தற்போதைய நில அமைப்பில் எந்த மாற்றத்தையும் செய்யக்கூடாது என யாழ். நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது, சம்பந்தப்பட்ட இடத்திற்கு நேரில் சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

 

புதைகுழி அமைந்துள்ள பகுதியில் ஏற்கனவே இருந்த வீதியை, நல்லூர் பிரதேச சபையினர் அண்மையில் செப்பனிட்டுள்ளனர். இது அகழ்வுப் பணிகளுக்கும் சாட்சியங்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தலாம் என சட்டத்தரணிகளால் சுட்டிக்காட்டப்பட்டது.

 

அத்துடன் முழுமையான அகழ்வுப் பணிகள் நிறைவடையும் வரை இப்பகுதியில் எந்தவிதமான அபிவிருத்திப் பணிகளோ அல்லது கட்டுமானங்களோ மேற்கொள்ள அனுமதிக்கக்கூடாது எனவும் சட்டத்தரணிகள் கடுமையாக வலியுறுத்தினர்.

 

சட்டத்தரணிகளின் கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதவான், நீதிமன்ற அனுமதியின்றி நிலத்தோற்றத்தில் எவ்வித மாற்றத்தையும் செய்யக்கூடாது என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

 

இந்த உத்தரவின் மூலம், புதைகுழியில் மறைந்துள்ள உண்மைகளும் சாட்சியங்களும் சிதைக்கப்படாமல் பாதுகாக்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: admin