கிரீன்லாந்தில் அமெரிக்கப் போர் விமானங்கள்: ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம்!

கிரீன்லாந்தில் அமெரிக்கப் போர் விமானங்கள்: ஆர்க்டிக் பிராந்தியத்தில் பதற்றம்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், டென்மார்க்கிற்குச் சொந்தமான தன்னாட்சிப் பிரதேசமான கிரீன்லாந்தை (Greenland) அமெரிக்காவுடன் இணைத்துக்கொள்ள விருப்பம் தெரிவித்துள்ள நிலையில், அங்கு அமெரிக்கப் போர் விமானங்கள் தரையிறங்கியுள்ளன. இது ஆர்க்டிக் பிராந்தியத்தில் பெரும் அரசியல் மற்றும் இராணுவப் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

 

வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு கட்டளை (NORAD), தனது போர் விமானங்கள் கிரீன்லாந்திலுள்ள பிடூஃபிக் (Pituffik) விண்வெளித் தளத்திற்கு வந்து சேரும் என்று அறிவித்துள்ளது.

 

இது நீண்டகாலமாகத் திட்டமிடப்பட்ட ஒரு வழக்கமான இராணுவ நடவடிக்கை என்றும், டென்மார்க் மற்றும் கிரீன்லாந்து அரசாங்கங்களுக்கு இது குறித்து முன்னரே தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்கா கூறுகிறது.

 

கிரீன்லாந்தை அமெரிக்காவிடம் ஒப்படைக்க மறுக்கும் டென்மார்க் மற்றும் பிற ஐரோப்பிய நாடுகள் மீது ட்ரம்ப் வர்த்தக வரிகள் (Tariffs) விதிக்கப்போவதாக எச்சரித்துள்ள நிலையில் இந்த இராணுவ நகர்வு நிகழ்ந்துள்ளது.

 

அமெரிக்காவின் அழுத்தங்களுக்கு மத்தியில், பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் நோர்வே போன்ற நாடுகள் டென்மார்க்கிற்கு ஆதரவாகத் தமது படைகளை கிரீன்லாந்திற்கு அனுப்பத் தொடங்கியுள்ளன.

 

ஆர்க்டிக் பகுதியில் சீனா மற்றும் ரஷ்யாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதைக் காரணம் காட்டி, அமெரிக்கா இந்தத் தீவைக் கைப்பற்ற முயற்சிப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

 

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கிரீன்லாந்தை வாங்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கியுள்ள நிலையில், அதற்குப் பணிய மறுக்கும் ஐரோப்பிய நாடுகள் மீது வர்த்தக வரிகளை (Tariffs) விதிப்பதாக மிரட்டியுள்ளார். இதற்கு ஐரோப்பிய ஒன்றியம் (EU) மற்றும் டென்மார்க் மிகக் கடுமையான பதிலடிகளைக் கொடுத்துள்ளன.

 

“ஐரோப்பா மிரட்டல்களுக்கு அடிபணியாது” என்று டென்மார்க் பிரதமர் மெட்டே பிரடெரிக்சன் (Mette Frederiksen திட்டவட்டமாகக் கூறியுள்ளார். கிரீன்லாந்து விற்பனைக்கு அல்ல என்பதையும், அது ஒரு தனி நாடல்ல, டென்மார்க் இராச்சியத்தின் ஒரு பகுதி என்பதையும் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

 

கிரீன்லாந்தின் பாதுகாப்பு என்பது ஒட்டுமொத்த நேட்டோ (NATO) அமைப்பின் கடமையாகும். அமெரிக்கா தனிச்சச்சையாக அங்கு உரிமை கோர முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

 

சமீபத்தில் வோஷிங்டனில் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் “மிகவும் கடினமாக” இருந்ததாகவும், அமெரிக்கா கிரீன்லாந்தை ஆக்கிரமிக்கும் எண்ணத்தை இன்னும் கைவிடவில்லை என்றும் அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

 

 

இதேவேளை அமெரிக்காவின் வர்த்தக வரி மிரட்டலுக்கு எதிராக ஐரோப்பிய ஒன்றியம் தனது சக்திவாய்ந்த பொருளாதார ஆயுதமான “Anti-Coercion Instrument (ACI)”-ஐப் பயன்படுத்தத் தயாராகி வருகிறது.

 

அமெரிக்கா வரி விதித்தால், பதிலுக்கு அமெரிக்கத் தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சேவைகள் மீது ஐரோப்பா கடும் கட்டுப்பாடுகளை விதிக்கும்.

 

‘Operation Arctic Endurance’ என்ற பெயரில் பிரான்ஸ், ஜெர்மனி, நோர்வே மற்றும் பிாித்தானியா ஆகிய நாடுகள் கிரீன்லாந்திற்குத் தமது துருப்புகளை அனுப்பத் தொடங்கியுள்ளன. இது அமெரிக்காவின் ஆதிக்கத்தைத் தடுப்பதற்கான ஒரு கூட்டு நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.

Recommended For You

About the Author: admin