காசா அமைதி வாரியத்தில் இணையுமா ரஷ்யா? ஜனாதிபதி டிரம்பின் அழைப்பை உறுதி செய்தது கிரெம்ளின்!
உலக அரங்கில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘காசா அமைதி வாரியத்தில்’ (Board of Peace) இணையுமாறு, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதினுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், ராஜதந்திர ரீதியில் இந்த அழைப்பை விடுத்துள்ளதை ரஷ்ய அதிபர் மாளிகையான கிரெம்ளின் இன்று (ஜனவரி 19) உறுதிப்படுத்தியுள்ளது.
“இந்த முன்மொழிவை நாங்கள் தற்போது விரிவாக ஆய்வு செய்து வருகிறோம். இது தொடர்பான மேலதிக விபரங்களை அமெரிக்கத் தரப்பிடம் இருந்து எதிர்பார்க்கிறோம்” என்று கிரெம்ளின் செய்தித் தொடர்பாளர் டிமிட்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
காசா போரை முடிவுக்குக் கொண்டு வந்து, அந்தப் பிராந்தியத்தை மறுசீரமைக்கவும், நிர்வாகத்தை மேற்பார்வையிடவும் டிரம்ப் நிர்வாகத்தால் உருவாக்கப்பட்ட ஒரு சர்வதேசக் குழுவாகும்.
இந்த வாரியத்தில் ஏற்கனவே இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, துருக்கி அதிபர் எர்டோகன் மற்றும் ஹங்கேரி பிரதமர் விக்டர் ஓர்பன் உட்பட பல உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி டிரம்ப் பதவியேற்ற பிறகு, காசா போரை முடிவுக்குக் கொண்டுவர 20 அம்சத் திட்டம் ஒன்றை முன்வைத்துள்ளார். இதன் ஒரு பகுதியாகவே இந்த ‘அமைதி வாரியம்’ அமைக்கப்பட்டுள்ளது. ரஷ்யா இதில் இணைந்தால், அது மத்திய கிழக்கு அரசியலில் ஒரு புதிய திருப்பமாக அமையும் எனக் கருதப்படுகிறது.
சர்வதேச அரசியல் களத்தில் இந்த நகர்வு உக்ரைன் – ரஷ்யா போர் பதற்றங்களுக்கு இடையிலும் டிரம்ப் – புதின் இடையிலான உறவில் ஒரு புதிய அத்தியாயத்தைத் தொடங்குமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

