போக்குவரத்து பொலிஸாரினால் தாக்கப்பட்ட இளைஞர்கள்
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் பகுதியில் பொலிஸாரின் தாக்குதலில் இருவர் காயமடைந்த நிலையில் பொலிஸாருக்கும் இளைஞர்களுக்குமிடையே ஏற்பட்ட வாக்குவாதத்தினால் அப்பகுதியில் பதற்ற நிலைமையேற்பட்டது.
நேற்றிரவு குருக்கள்மடம் முருகன் ஆலய வீதியில் சென்ற இளைஞர்கள் மீது போக்குவரத்து பொலிஸார் தாக்குதல் நடாத்தியதாக தெரியவருகின்றது.
பிரதான வீதியில் வீதிச்சோதனை நடாத்திய நிலையில் உள்வீதியில் நின்ற போக்குவரத்து பொலிஸாரே இந்த தாக்குதலை நடாத்தியுள்ளதாக அப்பகுதி தகவல்கள் தெரிவிக்கின்றன.
பொலிஸாரின் தாக்குதலுக்குள்ளான இளைஞர்கள் செட்டிபாளையம் வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில் அப்பகுதிக்கு காரிலும் பொலிஸ் வாகனத்திலும் மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்ட நிலையில் அங்கிருந்த இளைஞர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே வாக்குவாதம் இடம்பெற்றது.
மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞர்களை நிறுத்துவதற்கு பல்வேறு வழிகள் உள்ளபோதும் கெல்மட்டினால் தாக்குதல் நடாத்தியுள்ளதுடன் அவர்கள் விழுந்த நிலையிலும் தாக்குதல் நடாத்தியுள்ளதாகவும் இது பொலிஸாரின் அராஜகமான செயற்பாடுகள் எனவும் இதன்போது அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.
இதன்போது குறித்த இளைஞர்கள் பயணித்த மோட்டார் சைக்கிள் பொலிஸாரினால் கொண்டுசெல்லப்பட்டதுடன் தாக்குதல் தொடர்பில் இளைஞர்களினால் களுவாஞ்சிகுடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடும் பதிவுசெய்யப்பட்டுள்ளது.

