சாவகச்சேரி நகர சபையின் பாதீட்டை தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்கள் எதிர்த்த நிலையிலும் , ஏனைய 14 உறுப்பினர்களின் ஆதரவுடன் பாதீடு நிறைவேற்றப்பட்டுள்ளது.
சாவகச்சேரி நகரசபையின் 2026 ஆம் ஆண்டுக்கான பாதீட்டை தவிசாளர் வடிவேல் ஸ்ரீபிரகாஸ் நேற்றைய தினம் திங்கட்கிழமை சபையில் சமர்ப்பித்து உரையாற்றினார்.
அதனை தொடர்ந்து உறுப்பினர்கள் தமது கருத்துக்களை முன் வைத்ததை தொடர்ந்து, வாக்கெடுப்பு நடைபெற்ற போது, பாதீட்டுக்கு ஆதரவாக 14 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
தமிழரசுக் கட்சியின் 06 உறுப்பினர்களும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் கட்சியின் 05 உறுப்பினர்களும், ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரண்டு உறுப்பினர்களும், ஈழமக்கள் ஜனநாயகக் கட்சியின் ஒரு உறுப்பினரும் ஆதரவாக வாக்களித்தனர்.
எதிராக தேசிய மக்கள் சக்தியின் 3 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
18 உறுப்பினர்களை கொண்ட சாவகச்சேரி நகர சபையில், அகில இலங்கை தமிழ் காங்கிராஸின் 06 உறுப்பினர்களில் ஒரு உறுப்பினர் நீதிமன்ற உத்தரவின் பேரில் சபை அமர்வில் கலந்து கொள்ள தடை விதிக்கப்பட்டுள்ளமையால் , 17 உறுப்பினர்களுடன் சபை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

