திருகோணமலை மாநகரசபையின் முதல்வர் க.செல்வராஜாவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2026ஆம் ஆண்டிற்கான பாதீடு சபை உறுப்பினர்களினால் இன்று (23) ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
திருகோணமலை மாநகரசபையின் முதலாவது பாதீடு சபையின் முதல்வர் க.செல்வராஜா, மாநகர ஆணையாளர் உ.சிவராசா மற்றும் செயலாளர் ஆகியோரின் பங்குபற்றுதலுடன் இன்று (23) காலை இடம்பெற்றது.
இதன்போது தமிழரசுக் கட்சி உறுப்பினர் அஜித்குமார் பாதீட்டை முன்மொழிய தமிழரசுக் கட்சி உறுப்பினர் குமாரகுலசிங்கம் வழிமொழிய அதனை சபை ஏகமனதாக ஏற்றுக் கொண்டது.
25 உறுப்பினர்களைக் கொண்ட சபையில் இன்றைய தினம் 20 பேர் பங்கு கொண்டிருந்ததுடன் 5 பேர் சபைக்கு சமூகமளிக்கவில்லை.
இதில் தமிழரசுக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஆகியோர் கலந்து கொண்டிருக்கவில்லை.
சுகவீனம் காரணமாகவும், தனிப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் அவர்கள் கலந்து கொண்டிருக்கவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில் சுயேட்சைக்குழு உறுப்பினர் ஒருவர் சுகவீகமான நிலையில் சபை நடவடிக்கை நிறைவுபெற்ற பின்னர் தாமதமாக வருகை தந்ததை காண முடிந்தது.
அதேபோன்று தமிழரசுக் கட்சி உறுப்பினரும் தாமதமாக வருகை தந்திருந்தார். ஏன் தாமதமாக வருகை தருகின்றீர்கள் என ஊடகவியலாளர் கேட்டபோது எனக்கு நேரம் கிடைக்கின்றபோதுதானே வரலாம் என்ற பதிலை வழங்கியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

