இந்தியா வழங்கிய பெரும் மருத்துவ உதவி – மலையக மக்களுக்கு உதவப்போகும் ‘கள மருத்துவமனைகள்’ !!

‘டிட்வா’ சூறாவளியால் பெரும் பாதிப்புக்குள்ளான மக்களுக்குச் சிகிச்சையளிக்கும் நோக்கில், 70 இற்கும் மேற்பட்ட இந்திய இராணுவ மருத்துவ மற்றும் துணைப் பணியாளர்கள் மற்றும் அத்தியாவசிய வாகனங்களுடன் கூடிய இந்திய விமானப்படையின் பாரிய C-17 ரக விமானம் இன்று (மாலை) கொழும்பில் தரையிறங்கியது.

இந்தியா வழங்கியுள்ள விரைவாகப் பயன்படுத்தக்கூடிய இரண்டு கள மருத்துவமனைகளின் (Field Hospitals) முதல் பகுதியாக, இந்தப் படையினர் களத்தில் இறங்கியுள்ளனர்.

வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் உறுதி:

இந்த அவசர மனிதாபிமான உதவியை இந்திய வெளியுறவு அமைச்சர் கலாநிதி. எஸ். ஜெய்சங்கர் உறுதிப்படுத்தினார். அனர்த்தத்தின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, இலங்கை மக்களுக்கு உடனடி சுகாதார ஆதரவு அளிக்கும் நோக்கில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இந்தியா – இலங்கையின் நெருங்கிய பந்தத்தை வெளிப்படுத்தும் வகையில், இந்தப் படையினர் உடனடியாக அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட இடங்களுக்குச் சென்று மருத்துவ சேவைகளை வழங்கவுள்ளனர்.

இந்தியாவின் தொடர்ச்சியான ‘சகர் பந்து’ (Operation Sagar Bandhu) மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக இந்தக் கள மருத்துவமனைகள் வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. இது பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களின் மருத்துவத் தேவைகளைப் பூர்த்தி செய்யப் பெரிதும் உதவும்.

Recommended For You

About the Author: admin